அண்டை மாநில முகவரி உள்ளவர்கள் என்னை எதிர்ப்பதா? சந்திரபாபுவை வெற்றி பெற செய்ய நட்சத்திர பேச்சாளர்களாக மாறி உள்ளனர்

*தங்கை சர்மிளா மீது முதல்வர் ஜெகன் கடும் தாக்கு

திருமலை : அண்டை மாநில முகவரி உள்ளவர்கள் என்னை எதிர்க்கவும், சந்திரபாபுவை வெற்றி பெற செய்யவும் நட்சத்திர பேச்சாளர்களாக மாறி உள்ளனர் என்று பொதுக்கூட்டத்தில் தங்கை சர்மிளாவை முதல்வர் ஜெகன்மோகன் தாக்கி பேசினார்.ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் ஆசரா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் குழுக்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அனந்தபுரம் மாவட்டம் உரவகொண்டாவில் ஒய்எஸ்ஆர் ஆசரா திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் நேரடியாக மகளிர் குழுக்களின் பயனாளிகளின் வங்கி கணக்கில் ₹6,394 கோடி பணம் டெபாசிட் செய்தார்.பின்னர் பொதுக்கூட்டத்தில் ஜெகன் மோகன் பேசியதாவது: நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திர மாநிலத்தில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு உரிமை அளிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். பெண்கள் நன்றாக இருந்தால்தான் மாநிலம் முன்னேறும். கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்தன.

ஆனால் நான் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் இல்லாமல் நலத்திட்டங்கள் நேரடியாக பயணாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் ₹5 லட்சம் மதிப்புள்ள சொத்து உங்கள் கைக்கு வரும். ஆனால் அண்டை மாநில முகவரி உள்ளவர்கள் என்னை எதிர்க்கவும் சந்திரபாபுவை வெற்றி பெற செய்யவும் பல கட்சி கொடியுடன் நட்சத்திரப் பேச்சாளர்களாக (சர்மிளா) மாறி உள்ளனர். எனக்கு ஒரு நட்சத்திர பேச்சாளர்களும் இல்லை. இந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வீட்டில் இந்த அரசின் மூலம் பயன் அடைந்திருந்தால் நீங்களே நட்சத்திர பேச்சாளர்களாக எனக்கு இருக்க வேண்டும்.

மக்களின் இதயங்களில் கோயில் கட்டுவதுதான் ஜெகனின் அஜெண்டா. நீங்கள் தான் என் படைவீரர்களாக இருந்து என்னுடன் வாருங்கள். உங்கள் வாக்கு ஜெகனை முதல்வர் ஆக்குவது மட்டுமல்ல, ஒவ்வொரு ஏழையும் நல்வாழ்வு பெற வேண்டுமானால் அது ஜெகன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாநில தலைவராக பொறுப்பேற்ற தனது தங்கை ஒய்.எஸ்.சர்மிளா குறித்து ஜெகன்மோகன் கடுமையாக தாக்கி பேசியது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு