பேச்சுவார்த்தை தொடங்கியது அதிமுக-புதிய தமிழகம் இடையே கூட்டணி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக – புதிய தமிழகம் கட்சி இடையே பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை சென்று, அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து பேசினர். பின்னர் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வெற்றி கூட்டணியை அமைப்பதுதான் எங்களுடைய மிக முக்கியமான நோக்கம். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து அதிமுக குழுவிடம் தெரிவித்து இருக்கிறோம்.

மீண்டும் எங்கள் பேச்சுவார்த்தை தொடரும். அதில் சுமுகமான முடிவு ஏற்பட்டு, தமிழகத்தில் ஒரு வலுவான வெற்றி கூட்டணி அமையும் என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுபடி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து, கூட்டணி சம்பந்தமாக பேசினோம். அதிமுக சார்பாக ஏற்கனவே தேர்தல் பற்றி பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சந்தித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, அவர் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அதை எடப்பாடியிடம் தெரிவிப்போம். மீண்டும் சந்தித்து பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு