Saturday, June 29, 2024
Home » நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவத் துறையிலும், பல்வேறு பொது சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறைதான் இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து இந்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்.

பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில், சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு சம வாய்ப்பையும் உறுதிசெய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை பின்பற்றி வருகிறோம். இந்த முறையால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிடவும் முடிந்தது. ஆனால், 2017ம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பின்பு, இந்த நிலை முற்றிலும் மாறி, மருத்துவப் படிப்பு என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களால் இந்த தேர்வில் வெல்ல இயலாது. அதுமட்டுமல்ல; கிராமப்புற பகுதிகளிலும் பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவ சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, அதனை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
திமுக சார்பில் மட்டுமல்ல; திமுக இளைஞரணி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, மாணவர் அணியையும், மருத்துவர் அணியையும் ஒருங்கிணைத்து, “நீட் விலக்கு-நம் இலக்கு” என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தனது பரிந்துரையில் விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் அசைக்க முடியாத கருத்தொற்றுமை நிலவி வருகிறது. இதனடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகும் ஆளுநரால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல், மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், என் தலைமையில் 5.2.2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, இந்த சட்டமுன்வடிவை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 8.2.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டு, இதுகுறித்து ஒன்றிய அரசால் கோரப்பட்ட அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய பதில்களை வழங்கியுள்ள நிலையிலும், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், அண்மையில் நடந்த நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளின் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன. இதுவரை இருந்திராத அளவிற்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது. தேர்வுகள் காலதாமதமாக தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்த கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, இவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள். தேர்வு மையத்தில், தேர்வுக் கண்காணிப்பாளரே விடைத்தாள்களை நிரப்பிய ஊழல் என குவிந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள், பல ஆண்டுகாலம் உழைத்து, பெரும் செலவழித்து, இந்த போட்டித் தேர்வுக்கு தயாரான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து, தவறே நடைபெறவில்லை என்று கூறிய ஒன்றிய அரசு, பின்பு உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்த தேர்வை நடத்தும் NTA அமைப்பின் தலைவரை மாற்றியுள்ளது.

தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவு தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகளை வெற்றியடைய செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடவும் தேவையான முன்னெடுப்பாக, இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தீர்மானம், “கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

இந்த தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12வது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனி தீர்மானம் குறித்து தங்கள் கருத்துகளை வேல்முருகன் (தவாகா), ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), முகமது ஷாநவாஸ் (விசிக), ஜி.கே.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக ஓபிஎஸ் அணி) ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினர்.

மேலும் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில் “ நீட் அவசியம் தேவை. நீட் வேண்டும். எனவே முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க முடியாது. இதனால் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நிச்சயமாக நீட் ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என்ற உறுதியை அளிக்கிறேன். எனவே நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும்” என்றார். இதை தொடர்ந்து முதல்வரின் அரசினர் தனி தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

* நாடு முழுவதும் எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் குரல்
பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலநிலையை உணர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன. “மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே முடிவெடுத்து பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi