நீட் தேர்வில் குழப்பம், குளறுபடி தேசிய தேர்வு முகமை பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: நீட் தேர்வில் குழப்பமும், குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும், இதற்கு தேசிய தேர்வு முகமை முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார். சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை சொன்னது. இந்த கருணை மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகிறது என்றால், உச்ச நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வந்த தீர்ப்பின் அடிப்படையில் வழங்கினோம் என்கிறார்கள். இதற்கு என்டிஏ ஆதாரமாக காட்டப்படும் தீர்ப்பு என்பது, 2018ல் சிஎல்ஏடி (Common Law Admission Test) என்று சொல்லக் கூடிய தேர்விற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும்.

சிஎல்ஏடி தேர்விற்கான தீர்ப்பை நீட் தேர்விற்கு பொருந்தும் வகையில் எடுத்துக் கொண்டு, கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரும் மோசடி. கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநில மாணவர்களுக்குத்தான் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கலாம் என்ற தகவல், தேர்வு எழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியாகும். எனவே முதல்வர் கூறியதைப் போல, நீட் தேர்வு விலக்கு ஒன்றே தமிழகத்தின் இலக்கு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது