வீரியம் குறையக்கூடாது…

இந்தியாவை பொறுத்தவரை எய்ம்ஸ், நீட், யுஜிசி-நெட் ஜேஇஇ மெயின், ரயில்வே என்று பல்வேறு போட்டித்தேர்வுகள் ஒன்றிய அரசால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை. இதனால் குறிப்பிட்ட ஒருசாரர் மட்டுமே பயன்பெறுகின்றனர் என்பது சில ஆண்டுகளாக தொடரும் சர்ச்சையாக உள்ளது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மருத்துவபடிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த ேதர்வால் ஏழை, எளிய மாணவர்களுக்கான வாய்ப்பு தடைபடுகிறது என்பதே இதற்கான முக்கியகாரணம். இதற்கிடையில் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மே5ம்தேதி நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவக்கல்விக்கான இளநிலை நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அப்போது பீகார், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு, எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் ெபற்றது, அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6பேர் முதலிடம் ெபற்றது போன்ற சம்பவங்கள் பலத்த சர்ச்சையை கிளப்பியது.

நீட் முறைகேடுகள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மாநிலங்களில் நடந்துள்ளதால் இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 8ம்தேதி நடக்கிறது. இதேபோல் ஒன்றிய கல்வி அமைச்சகம் இம்மாதம் 18ம்தேதி நடத்திய யுஜிசி-நெட் தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. இதையடுத்து மறுநாளே தேர்வுகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டது. இந்தநிலையில் ஒன்றிய அரசின் பணியாளர் பயிற்சித்துறையானது (டி.ஓ.பி.டி) தேர்வுகளில் முறைகேடு செய்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளது. ‘‘பொதுத்ேதர்வுகள் நியாயமற்ற வழிமுறைகளை தடுத்தல்) சட்டம் 2024ன்படி தண்டனை விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி வினாத்தாளை கசியவிடுதல், பதில்களை வெளியிடுதல், பொதுத்தேர்வின் போது அங்கீகரிக்கப்படாத வகையில் விண்ணப்பதாரருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுதல், கணினி வலையமைப்பை சேதப்படுத்துதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற குற்றச்செயல்களில் தனிநபரோ, குழுவோ அல்லது நிறுவனமோ ஈடுபட்டால் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மிகமுக்கியமாக பொதுத்தேர்வு ஆணையத்தால் தேர்வுகளை நடத்தும் சேவை வழங்குநர் முறைகேடுகளில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின்படி ரூ.1 கோடி அபராதம் விதித்து தண்டிக்கப்படுவார். இத்தகைய சேவை வழங்குநர்களுக்கு 4வருடத்திற்கு எந்தஒரு பொதுத்தேர்வையும் நடத்துவதற்கான பொறுப்பு தடை செய்யப்படும் என்றும் பணியாளர் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது சட்டத்தை அமல்படுத்துவதற்கான திடீர் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நாளை (24ம்தேதி) தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் தேர்வு முறைகேடுகள் குறித்த விவாதம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் வீரியத்தை குறைப்பதற்காக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள வீரியத்தை எந்தநிலையிலும் ஒன்றிய அரசு குறைத்துவிடக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி