நீட் குளறுபடிகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு

புதுடெல்லி: நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் மூன்று வாரம் அவகாசம் வேண்டும் என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றது. இதுதொடர்பாக, பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்கவும், நீட் தேர்வு குளறுபடி இல்லாமல் நடத்துவது தொடர்பான பரிந்துரை வழங்க குழு அமைக்கப்பட்டது.

அதில், இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட ஏழு நபர் குழு வரும் 30ம் தேதிக்குள் பரிந்துரை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “நீட் தேர்வுகளை குளறுபடிகள் இன்றி நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், கல்வியாளர்களிடமிருந்து 37,000 கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை குழு தாக்கல் செய்ய வேண்டும் இதனால், அறிக்கை தாக்கல் செய்ய மேலும் மூன்று வாரம் அதாவது அக்டோபர் 21ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?