நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

புதுடெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு நடந்த நீட் தேர்வு பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வினாத்தாள் கசிவு நடக்கவில்லை என்று தேர்வு முகமை தெரிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிய அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு முறையீட்டை வைத்தார். அதில், ‘நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு புதியதாக நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

ஏனெனில் விரைவில் கலந்தாய்வு நடத்த வாய்ப்பு உள்ளதால், இந்த விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான எழுத்துப்பூர்வ கடிதமும், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கூறுகையில், ‘எந்த ஒரு முறையீடு மற்றும் கோரிக்கையாக இருந்தாலும், வழக்கறிஞர்கள் விசாரணை அமர்வில் முறையிட வேண்டாம். பதிவாளரிடம் கோரிக்கை வையுங்கள். அவர் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று மனுவை பட்டியலிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுத்து தெரிவிப்பார்’ என்று கூறினர்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!