நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது: ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை

சென்னை: நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி 24 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தநிலையில், 4ம் தேதியே முடிவுகளை அறிவித்தது. இந்நிலையில், நீட் தேர்வில் மொத்தம் 67 பேர் 720 மதிபெண்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் எழுந்தது. மேலும், அரியானா மாநிலத்தில் ஒரே பயிற்சி மையத்தின் மூலம் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் தெரியவந்தது. அதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, முழு மதிப்பெண் வழங்கிய விவகாரத்தில் சில மையங்களில் கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்டதால், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் கேள்வித்தாள் மாறியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இது தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மீ்ண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஜூன் மாதம் 23ம் தேதி நீட் மறு தேர்வை தேசிய முகமை நடத்தியது. அதில் 1563 பேரில் 48 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. மாறாக 813 பேர் மட்டுமே பங்கேற்றனர். குறிப்பாக சண்டிகரில் 2 பேர் பதிவு செய்திருந்தும் தேர்வுக்கு வரவில்லை. ஜஜ்ஜார் மையத்தில் 494 பேர் பதிவு செய்திருந்தும் 287 பேர் மட்டுமே எழுதினர். இதற்கான முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியோருக்கான மதிப்பெண் பட்டியல்களும் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 6 பேர் உட்பட யாருமே மறுதேர்வில் முழு மதிப்பெண் பெறவில்லை. மாணவர்கள் அவர்களின் மறு தேர்வின் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்