ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை


சென்னை: தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர். அதை தொடர்ந்து, இந்த வழக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதற்கிடையே பல முறை சம்மன் அனுப்பியும் பாஜக தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தன், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் கேசவ விநாயகம், முரளி ஆகியோர் நேரில் ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை காட்டி தப்பி வருகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கேசவ விநாயகம் ரூ.4 கோடி வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறி உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து பாஜக அமைப்புசெயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் உதவியாளர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 4 பெரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. வரும் 4-ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக நயினார் உள்ளிட்ட 4 பேர் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்