நயினார் நாகேந்திரன் விரும்பினால் போதுமா? தன்மானம்தான் முக்கியம் சொல்கிறார் எடப்பாடி


கோவில்பட்டி: ‘அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்று நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது, எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற நிலையில் அவர்களுடைய புகார் நீண்ட காத்திருப்பிற்கு பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளியில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது. நாமக்கல் மாவட்டம் எருமையூர் பகுதியில் பள்ளி சுவரில் மனித மலம் பூசப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு 12 மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் ஒன்றிய, மாநில அரசுகள் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது. எத்தனை நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர் விரும்பினால் மட்டும் என்ன செய்வது. அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நாங்கள் என்றுமே அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. தலைவர்களைப்பற்றி அவதூறாக பேசுகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதனை ஏற்க மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்’ என்றார்.

Related posts

100 நாள் ஆட்சியில் 38 ரயில் ரூ விபத்துகள், 21 உயிரிழப்பு: மோடி அரசு தோற்றுவிட்டதாக காங்கிரஸ் விமர்சனம்

போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு