நவராத்திரி, தீபாவளியை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் கண்காட்சி: கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர்: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழு கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்ைத சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானியம் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனைஓலை பொருட்கள் போன்ற பொருட்களும்,

நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறியவகை நினைவு பரிசுகள் காட்சிப்படுத்த மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுபொருட்கள் தயாரிக்கும் குழுக்களும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் வரும் செப்டம்பர் 20ம் தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், மேலும் விவரங்களுக்கு 044 – 27664528, 9789361491 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்