கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு வரும் 24ம் தேதி முதல் நவக்கிரக சிறப்பு பேருந்து இயக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் சென்று மீண்டும் கும்பகோணம் வந்தடையும் நவக்கிரக சிறப்பு பேருந்து இயக்கம் வரும் 24ம் தேதி முதல் தொடங்குகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இந்த சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.

இதற்கு பயண கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.750. நவக்கிரக சிறப்பு பேருந்து காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம், இரண்டாவதாக திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம் பின்பு ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனம், 10 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம், காலை 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், காலை 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம், மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம் , மாலை 4 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனம்.

மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து அடையும். பிப்.24ம் தேதிமுதல் வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள் இணையதளத்தில் முன்பதிவு செய்து தங்களது பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எவ்வித சிரமமின்றி பயணிக்க டிஎன்எஸ்டிசி மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ள வேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி

கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்