இயற்கை, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும்: துறை செயலாளர், கலெக்டருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: இயற்கை, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று துறை செயலாளர், கலெக்டருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி, தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோருக்கு எழுதிய கடிதம்: சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளின் நில அழகையும், கடல் அழகையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக கோவளத்தை மையமாகக் கொண்டு தனியார் ஹெலிகாப்டர் சேவை கடந்த நவம்பர் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகிறது.

கோவளம் பகுதியில் உள்ள முட்டுக்காடு – கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வரும். ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், காலப்போக்கில் இங்கு வெளிநாட்டு பறவைகள் வருவது முற்றிலுமாக நின்று விடும் ஆபத்து உள்ளது. ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள், பறவைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன் கருதி ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் பாமக நடவடிக்கை எடுக்கும்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு