இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

‘‘உங்களது எதிர்காலம் ஒரு வருடத்திற்கானது என்றால், பூக்களைப் பயிரிடுங்கள்… உங்களது எதிர்காலம் பல வருடங்களுக்கானது என்றால் மரங்களைப் பயிரிடுங்கள்! உங்களது எதிர்காலம் வாழ்க்கைக்கானது என்றால், மனிதர்களைப் பயிரிடுங்கள்..!’’ என்ற வரிகளுக்கேற்ப இயற்கையுடன் பயிரிடப்பட்டவன்தான் மனிதன். ஆனால், இயற்கையும் மனிதனும் இணைந்து இயைந்து வாழவேண்டிய உலகில், இயற்கையை புரிந்துகொள்ளாமல், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வாழ்ந்து வரும் ஒரே உயிரினமும் மனிதன்தான். விலகி வாழ்வதோடு மட்டுமல்லாமல், அது தனக்குத் தரும் அளவற்ற செல்வங்களைப் பற்றி அறிந்துகொள்ளாமல், பொன்முட்டை இடும் வாத்தை, பேராசையால் கொன்ற கதையாக இயற்கையை அழித்து வருபவனும் மனிதன் மட்டுமேதான்.

தன்னைத் தோண்டுபவனுக்கும் தண்ணீரைத் தரும் நிலம் போல, தன்னை அழிப்பவனுக்குத் தன்னையே தரும் இயற்கையை அவன் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஒரு பயணம்தான் இது. மனிதன் தினசரி உண்ணும் காய், கனி, தானியங்களுடன் அவனைச் சுற்றி இருக்கும் பல தாவரங்களின் குணங்களை, அவற்றின் வரலாற்றை, அவை அவனுக்கு அளிக்கும் பற்பல பலன்களைச் சொல்வதுதான் இந்த ‘இயற்கை 360 டிகிரி’ தொடர்..!

தொடரின் முதல் பொருளாக ஆப்பிளை எடுத்துக்கொள்ள காரணம் இருக்கிறது. ஆதிமனிதன் செய்த முதல் பாவம் ஆப்பிளைத் தின்றதுதான் என்று கூறும் பைபிள், அந்தப் பழம்தான் மனிதனை நன்மை, தீமைகளை பகுத்தறியும் அறிவையும் தந்தது என்றும் கூறுகிறது. ஆக, ‘Forbidden Fruit’ எனப்படும் ஆதிமனிதனின் முதல் கனியான ஆப்பிளுடன் நமது தொடரைத் துவங்குவதுதானே சரியாக இருக்கும்..?!

ஆப்பிள்…
வாஷிங்டன் ஆப்பிள், ஃப்யூஜி ஆப்பிள், கார்ட்லாண்ட் ஆப்பிள், காஷ்மீர் ஆப்பிள், சிம்லா ஆப்பிள் என பயிரிடப்படும் இடங்களின் பெயரோடு பல வகைகளில் அழைக்கப்படும் இந்த ஆப்பிள் உண்மையில் தோன்றிய இடம் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் எனச் சொல்லப்படுகிறது.

Malus pumila என்பது ஆப்பிளின் தாவ ரப் பெயராகும். ஆப்பிள் என்ற ஆங்கிலப் பெயருக்கே பழம் என்பதுதான் பொருள் என்றாலும், Malus என்ற இதன் தாவரப் பெயருக்கு ‘தீங்கிழைக்கும்’ என்பதுதான் உண்மையான பொருளாம். ஆப்பிள் உண்மையிலேயே தீங்கிழைக்குமா என்ன? ஆப்பிளுடன் பயணிப்போம் வாருங்கள்…

ஆதாமும், ஏவாளும் உட்கொண்ட அந்த முதல் கனிதான் மனித இனத்திற்கே துன்பம் ஏற்படக் காரணமாயிற்று என்று ‘Book of Genesis’ல் கூறப்பட்டாலும், தீமைகளைக் காட்டிலும் நன்மைகளே ஆப்பிளில் அதிகம் உள்ளது என்கிறது அறிவியல். ஆப்பிளில் உள்ள அதிக நீர்த்தன்மை (86%), அதிக நார்ச்சத்து (3gm/fruit), மிதமான கலோரிகள் (95 cal/fruit) மற்றும் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், ஃபாஸ்பரஸ் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துகளுடன், க்வர்செட்டின், கேட்டச்சின், பெக்டின், க்ளோரோஜெனிக் அமிலம் போன்ற பாலிஃபீனால் தாவரச்சத்துகள், நோயெதிர்ப்பு ஆற்றலையும் நினைவுத்திறனையும் அதிகரித்து, அதேசமயம் மூளை, இதயம் மற்றும் உடல் தசைகளுக்கு வலிமையையும் சேர்க்கிறது என்று கூறப்படுகிறது.

ரத்தத்தின் எல்டிஎல்(LDL) கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் மற்றும் ஆஸ்துமா, கல்லீரல் நோய்களை ஆப்பிளின் இந்தத் தாவரச்சத்துகள் மட்டுப்படுத்துவதுடன் தோல் நோய், கண்நோய், பற்சிதைவு, குடற்புண் மற்றும் வயோதிகத்தில் வரும் அல்சைமர் நோய் ஆகியவற்றைக் குறைக்கவும் இது உதவுகிறது. அதுமட்டுமின்றி நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க இதன் வைட்டமின் சி மற்றும் பாலிஃபினால்கள், வைரஸ் கிருமித்தொற்றிற்கும் எதிராக செயல்படுவதால்தான், ‘An Apple a Day’ என மருத்துவர்களால் ஆப்பிள் பரிந்துரைக்கப்படுகிறது.

அதிகளவு நார்ச்சத்து மற்றும் க்வர்செட்டின் உள்ளிட்ட முக்கிய தாவரச்சத்துகள் அனைத்தும் இதன் தோலில் அதிகம் காணப்படுவதால் ஆப்பிளை ‘அப்படியே (தோலுடன்) சாப்பிட’ அறிவுறுத்துகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ‘‘அப்படியே சாப்பிடலாம் அல்லது வேக வைத்து ஆப்பிள் பை, ஜெல்லி, ஜாம் என்றும் சாப்பிடலாம்.! அதேபோல ஆப்பிள் ஜூஸை அப்படியே பருகலாம் அல்லது பதப்படுத்தி ஆப்பிள் சிடர் வினிகராகவும் பயன்படுத்தலாம்” என்கின்றனர் உலகெங்கும் உள்ள ஆப்பிள் பிரியர்கள்.

அப்படியென்றால் ஆப்பிளால் தீங்குகளே இல்லையா என்றால், ஒரு சிலர் ஆப்பிள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், அதிகளவில் உட்கொள்ளும்போது, ஆப்பிள் பழத்தின்
அமிலத்தன்மை, பற்களின் எனாமலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதையும், அதன் பெக்டின்கள் செரிமானத்தை குறைக்கக்கூடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் முக்கியமாக, ஆப்பிளின் விதைகளில் உள்ள அமீக்டலின் (amygdalin) என்ற தாவரப்பொருள், அதிகளவில் அதாவது, நூற்றுக்கணக்கான விதைகளை பொடி செய்து ஒன்றாக மென்று உட்கொள்ளும்போது மட்டும், சயனைட் (hydrogen cyanide) விஷமாக மாற்றமடைகிறது என்று கூறும் வல்லுநர்கள், அறியாமல் நாம் உட்கொள்ளும் ஓரிரு விதைகளால் ஆபத்து எதுவும் ஏற்படாது என்றும் உறுதியளிக்கின்றனர்.

இதுபோக, நீண்ட நாட்கள் கெடாமல் பளபளப்பாக இருக்க, ஆப்பிளின் மீது தடவப்படும் வேக்ஸ் பற்றிய புகாருக்கு, இயற்கையிலேயே ட்ரைடெர்பனாய்ட் (tri-terpanoid) என்ற இயற்கை வேக்ஸூடன் உள்ள பழங்களில் ஒன்றுதான் ஆப்பிள் என்றும், அதனை பறித்துக் கழுவும்போது இந்த இயற்கை வேக்ஸ் போய்விடுவதால், செயற்கை வேக்ஸ் போடப்படுகிறது என்கின்றனர் இதன் சாகுபடியாளர்கள். என்றாலும், அந்த செயற்கை வேக்ஸ் கூட சோளம் அல்லது பனையிலிருந்து பெறப்படும் ஆர்கானிக் வேக்ஸ்தான் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஆப்பிளை வாங்கினால் அதன் தோலை நீக்கி உண்பது, சுடுதண்ணீரில் போடுவது எல்லாம் அவசியமில்லை என்றும் இவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆப்பிளை நறுக்கி வைத்தபின், அது பழுப்பு நிறத்தில் மாறுவதன் காரணம், பாலிஃபினால் ஆக்சிடேஸ் என்ற நொதியின் எதிர்வினையால்தான். இதைத் தடுக்க, மரபியல் மாற்றத்துடன் அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட ‘ஆர்டிக் ஆப்பிள்கள்’ தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளன என்பதும் கூடுதல் தகவல்.முதல் மனிதன் பிறந்ததிலிருந்து உண்டு வரும் இந்த ஆப்பிள்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள் என பல்வேறு நிறங்களில், 7500க்கும் மேற்பட்ட வகைகளில் உலகெங்கும் விளைவிக்கப்படுகிறது. வேரிலிருந்து க்ராஃப்டிங் (root grafting) மூலமாக விளைவிக்கப்படும் ஆப்பிள் மரங்கள், உலகளவில் பெரிதும் பயிரிடப்படும் கனிகளில் ஒன்றாகத் திகழ்கிற ஆப்பிள் மரங்கள், பொதுவாகக் காய்க்கத் தொடங்குவதற்கு, குறைந்தது மூன்று வருடங்கள், அதிக
பட்சமாக எட்டு வருடங்களாகிறது.

உலகளவில் சீனாதான் ஆப்பிளை அதிகம் விளைவிக்கிற நாடு. இந்தியா இதில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. கஜகஸ்தானில் உற்பத்தியான ஆப்பிள் இந்தியா வந்ததற்கும் ஓர் அழகிய வரலாறு இருக்கிறது. கஜகஸ்தானின் அல்மட்டி நகரிலிருந்து சில்க் ரூட் வழியாக இந்தியா வந்த ஆப்பிள், முதலில் காஷ்மீரில் மட்டும்தான் பயிரிடப்பட்டது. பின்னர் முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் மூலமாக இந்தியா முழுவதும் பரவியது.

அதிலும், தொழு நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய இந்தியாவிற்கு வந்த ‘சாம்வேல் ஸ்டோக்ஸ்’ என்ற அமெரிக்கர், ஒரு ராஜபுத்திர பெண்ணைத் திருமணம் செய்து, பின்பு ஹிமாச்சல் பிரதேசத்தில், தனது மனைவியின் சிறு நிலத்தில் ஆப்பிள் சாகுபடி செய்திட, அதன் நிறமும், சுவையும் அருகிலிருந்த அனைவரையும் ஈர்த்ததால், அதையே உள்ளூர் மக்களுடன் பயிரிட்டு வளர்த்ததுதான் இன்றைய உலகப் புகழ்பெற்ற சிம்லா ஆப்பிளாக வலம் வருகிறது.

இந்த சாம்வேல் ஸ்டோக்ஸ், இந்திய கலாச்சாரத்தால் கவரப்பட்டு பிரம்ம சமாஜ்யத்தில் இணைந்து, சத்யானந்த ஸ்டோக்ஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டதுடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து நமது சுதந்திரத்திற்காக காதல் மனைவியுடன் இணைந்து போராடியது சிம்லா ஆப்பிளை விட சுவைமிகுந்த கிளைக்கதை.

காதலுக்கு ஆப்பிள் ஒரு குறியீடாகத்தான் உலகம் முழுவதும் கருதப்படுகிறது. ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணிடம் ஆப்பிளைத் தூக்கியெறிந்தால் அவளை திருமணம் செய்ய விரும்புவதாகப் பொருளாம். அந்த ஆப்பிளை அந்தப்பெண் கீழே விழாமல் பிடித்தால் அவளுக்கும் விருப்பம் என்பது பொருளாம். இப்படி பல்வேறு நம்பிக்கைகள் மட்டுமல்லாமல், உலகெங்கும் பயிரிடப்படும் அதன் வகைகளைப் போலவே, உலகெங்கும் பல வரலாற்றையும் கொண்டுள்ளது ஆப்பிள்.

கிரேக்கத்தில் ட்ரோஜன் போருக்கு காரணமாக இருந்த பழம், ஐரோப்பியர்களுக்கு ஐட்டூன், தோர் போன்ற கடவுள்களுக்கும் சாகாவரத்தை அளித்த பழம், அரேபியர்களுக்கு நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும் சமர்கண்ட் என்ற மந்திரப்பழம் என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகப் பிரசித்தி பெற்றுள்ளது இந்த ஆப்பிள் பழம்.

யோசித்துப் பார்த்தோமேயானால், ஆதாமின் ஆப்பிள்தான் வெட்கத்தைக் கற்றுக்கொடுத்தது. ஆடை அணியவும் கற்றுக்கொடுத்தது. நியூட்டனின் ஆப்பிள் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்து, நிலவில் நமது எடைக்கும் புவியில் நமது எடைக்குமான வித்தியாசத்தை புரிய வைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிளோ இன்று நம் எல்லோரது கைகளிலும் கனவிலும் ஏதோ ஒருவகையில் இருக்கத் தூண்டும் மாபெரும் செல்போன் நிறுவனம் உருவாகக் காரணமாகவும் இருந்துள்ளது.

ஏன்… சமீபத்தில் கூட, மரபியல் சோதனைகள் மூலமாக, ஆதிமனிதனின் ஆப்பிள் மரத்தை, Tree of Knowledge என்ற அறிவு மரமாக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, ஆப்பிளையும், மனிதனையும் பிரிக்க முடியாது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது..!ஆக, தினமும் ஒரு ஆப்பிளை உட்கொண்டால், மருத்துவரிடம் நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று பொருள்படும், ‘An Apple a day, keeps the Doctor away!’ எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான சிலேடை, மனித ஆரோக்கியத்தில் ஆப்பிளின் பங்கைப் பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் பொருத்தமான ஒன்றாகத்தான் விளங்குகிறது..!

(இயற்கையுடன் பயணம் நீளும்…)

Related posts

முகப் பருக்களை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிநாட்டினர் கொண்டாடும் பிச்வாய் ஓவியங்கள்!

உன்னத உறவுகள்