இயற்கையோடு இணைந்த வாழ்வும் வருமானம் ஈட்டிக் கொடுக்கும்

பெரும்பாலும் ஒவ்வொரு தாவரமும்மனித குலத்திற்கு உணவாகவோ மருந்தாகவோ செயல்படுகிறது. அதில் நம்மைச் சுற்றியுள்ள பல மூலிகைகளை சிறு அளவாவது தொடர்ந்து பயன்படுத்தி வரும்பொழுது அதன் நல்ல தன்மைகள் நம் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தியும் நோய்கள் வராமலும் காக்கிறது. சேலத்தில் பசுமைக் குடிலை அமைத்து மக்களுக்கு நஞ்சற்ற இயற்கையான முறையில் மஞ்சள் மற்றும் பல இயற்கை மூலிகை சேர்த்துமதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து அசத்தி வருகிறார் ஆரண்ய அல்லி.

பசுமைக் குடில் வைக்கும் எண்ணம் தோன்றியது எப்படி?

மிகவும் நேசித்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வந்த டெய்லரிங் தொழிலை விட்டு மூலிகை சூப்ஸ், மூலிகைத் தேநீர் வகைகள், தனது தோட்டத்தில் விளைந்த மஞ்சள், அதன் golden turmeric latte வரிசைகள், காட்டு மலைத்தேன் வகையறாக்கள், மற்றும் சருமம், கூந்தல், உடல் சார்ந்த காஸ்மெட்டிக் வகைக்காக ஒரு ஆர்கானிக் ஷாப் ஆரம்பிக்கப் போகிறேன் என்ற போது தோழமைகள் அனைவரும் அது இது தற்கொலை முயற்சி என்றே பயந்தனர். அவர்கள் பயத்தில் நியாயமில்லாமல் இல்லை. கொஞ்ச காலம் முன்பு வந்து நம்மை பயமுறுத்திய H1N1 பன்றிக் காய்ச்சலும், அதன் பிறகான டெங்கு பரவலுக்கு நாங்கள் செய்து கொடுத்த வேப்பஈர்க்குக் கசாயம், பப்பாளி இலைச்சாறு, பசுமஞ்சள் வைத்தியம் எல்லாம் இணைந்து நோயாளிகளைக் குணப்படுத்திய வேகமும் என்னை நஞ்சில்லா நல்லுணவு மற்றும் உணவே மருந்துக்காக ஒரு தனிக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நோக்கி உந்தித் தள்ளியது. அப்போது மனதில் போட்ட விதையில் ஆரம்பித்தது தான் இந்த “பசுமைக் குடில்” கொரோனா காலத்தில் ஏற்பட்ட கொடுந்துயரங்கள் நான் செய்தது சரிதான் என்பதை பெருமளவு உறுதிப்படுத்தியது. அப்போது நாங்கள் கொடுத்த முசுமுசுக்கை தூதுவளை முடவாட்டுக்கால் கிழங்கு சூப் வகைகள் மற்றும் பிரீதீஸ்ஸ் எனும் வாயில் அடக்கும் பொடியும் மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்ததைப் பார்த்ததும் நண்பர்களும், உறவினர்களும், இதற்காக இடமும் தந்து, முழு பொருளுதவியும் செய்தனர். இப்போது இதனை ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகின்றது. தற்போது ஒவ்வொருவரிடம் இருந்தும் பல்வேறு பாராட்டுகள் கிடைக்கும் போது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. மேலும் என்னுடைய பெயரிலேயே இந்தப் பசுமை குடில் அமைத்ததால் நண்பர்கள் மூலம் நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

உங்கள் மஞ்சளின் தனிச்சிறப்புகள் என்ன?

எங்கள் முன்னோர்கள் பல ஆண்டு காலங்களாக இயற்கை முறையில் விளைவித்த மஞ்சளை விதைப்பொருளாக பயன்படுத்தி தற்போதும் அதே தரத்துடன் மஞ்சள் விளைவிப்பது தான் எங்கள் மஞ்சளின் தனிச்சிறப்பு. இதற்கு தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் மஞ்சளில் குர்க்குமின் அதிக அளவில் உள்ளது. இந்த குர்க்குமின் உடலுக்கு மிக நல்ல பலன்களை தருகிறது. மேலும் மஞ்சளில் நாங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் செய்து தருகிறோம்.

இன்ஸ்டண்ட் சீந்தில்சூப் பவுடர் குறித்து சொல்லுங்கள்?

வருடம் முழுவதும் சீந்தில் கொடிகள் கிடைக்கும் என்றாலும் மார்ச் முதல் ஏப்ரல் வரை முற்றிய தண்டு களை எளிதில் சேகரிக்கலாம். அழகிய ஒளிப் பச்சை நிறத்தில் இதய வடிவிலான இலைகள் கொண்ட ஏறுகொடி வகை. பொற்சீந்தில், அமிர்தவல்லி, அமிர்ததாரா, அமிர்தை, சாகாமூலி என்றெல்லாம் அதன் குணத்தால் அதாவது அமிர்தம் என்றால் ‘அழியாத தன்மையைக் கொடுக்கும்’ என்ற அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது. ஒருமுறை மரத்தில் படர்ந்து விட்டால் எவ்வளவு கோடை காலத்திலும் சாகாது. தரையில் உள்ள கொடிப்பகுதியை அறுத்து விட்டாலும் மரத்தில் உள்ள ஈரம் மற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூலமே உயிரோடு இருந்து மீண்டும் விழுதுகளை மண்ணிற்கு இறக்கிப் பிழைத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்ததால் சாகாமூலி என்றும் அழைக்கப்படுகிறது. வெண் மஞ்சள் நிறமுடைய கொத்துப் பூக்கள், காய்கள் பழுக்கும்போது செக்கச் செவேலெனப் பழுத்துத் தொங்கும் காட்சி அழகானது. அதன் விதைகள் மூலமும் சிறு செடிகள் பரவும் தன்மை வாய்ந்தது. கசப்புச் சுவை உடையது. இலை, கொடி, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படுபவை. பொதுவாக முற்றிய சீந்தில் தண்டுகள் அதிக அளவில் மருந்தாகப் பயன்படுகிறது. உடல் வெப்பம் குறைய, காய்ச்சல் குணமடைய, காய்ச்சலால் சோர்வடைந்த ஜீரண மண்டலம் நன்கு வேலை செய்ய, தலைபாரம், மூக்கில் நீர்வடிதல், அடுக்குத் தும்மல் குணமாக சீந்தில் குடிநீர் உதவுகிறது.

இன்சுலினைச் சுரக்க வைத்து ரத்தச் சர்க்கரையைக் குறைப்பதால் நீரிழிவு நோய்க்கு மருந்தாகவும், இந்த நோயால் ஏற்படும் அதீத கால் எரிச்சல், அதிக நீர்த் தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் மூலிகையாகவும் திகழ்கிறது. எலும்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது. புற்றுநோய்ச் செல்களை எதிர்க்கிறது. குறிப்பாக கீமோதெரபிக்குப் பிறகு உடலில் ஏற்படும் பின்னடைவுகளை சரி செய்து மீண்டும் பலம் பெற உதவுகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்பு நலன்கள் உடல் உறுப்புகளின் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. முற்றிய சீந்தில் தண்டுகளை சேகரித்துச் செய்யப்படும் சீந்தில் மா அல்லது சீந்தில் சர்க்கரை சித்த மருத்துவத்தில் தோல் நோய், மற்றும் ஈரல் நோய்களுக்குத் தரப்படும் மருந்தில் முக்கிய பங்காற்றுகிறது.

மிராக்கிள் கூலண்ட் ஆயிலின் சிறப்பு என்ன?

இதன் முக்கியமான சிறப்பே இதன் நறுமணம் தான். அதன் நறுமணமே பாசிடிவ்வான மனநிலையை தரும். இரவில் தூங்குவதற்கு முன்பாக இரண்டு கண்களின் இமைகளின் மீதும், கால் கட்டை விரல்களின் மீதும் பூசிக்கொண்டு படுத்தால் நல்ல உறக்கம் வரும். உடல் சூடு இருப்பவர்கள் தொப்புளிலும் இரண்டு சொட்டுகள் விட்டுக்கொள்ளலாம்.

கொல்லிமலை முடவாட்டுக்கால்கிழங்கு சூப் குறித்து…

மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, உடல் வலி, அடிக்கடி சோர்வடைதல் ஆகியவற்றால் துன்பப்படும் பலருக்கும் பெரும் பயனளித்துக் கொண்டிருப்பது தான் கொல்லிமலை முடவாட்டுக்கால் கிழங்கு சூப். இந்த சூப்பினை தயார் செய்து மாலை வேளையில் தினப்படி அருந்தினால் உடல் வலி நீங்கி நலம் பெறுவதை உணரலாம். இதற்குப் பத்தியங்கள் என்று எதுவும் தேவை இல்லை. பெரும் தொந்தரவுகள் இல்லாத பட்சத்தில் 48 நாட்களில் அனைத்து வலிகளும் குறைந்து விடும். அதற்கு மேலும் வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

கொல்லிமலைத் தேன் குறித்து…

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பழங்குடியின மக்களிடமிருந்து பெற்ற சுத்தமான தேன் வகைகள் எங்களிடம் கிடைக்கும். கொம்புத்தேன், மலைத்தேன், குகைக்கருந்தேன், செந்தேன், வெள்வேல்தேன் என பல வகைகள் உள்ளன. நாங்கள் தற்போது ஐந்து வகையான தேன் வகைகளை விற்பனை செய்து வருகிறோம். சிலவகையான தேன்கள் அவ்வப்போது தான் கிடைக்கும்.

உங்கள் தொழில் பயணம் எப்படி உள்ளது?

எனது தொழில் முனைவுப் பயணம் என்பது மிகவும் சவால் மிகுந்தது. கற்றல் என்பது ஒவ்வொரு நாளும் இருந்தால் மட்டுமே எந்த ஒரு தொழிலையும் சிறப்பாக செய்ய முடியும் என்பது எனது எண்ணம். நம் பொருட்களை பற்றி நாம் எவ்வாறு வலைத் தளங்களில் நேரடி வாடிக்கையாளர்களிடம் பேச வேண்டும் மற்றும் அதில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் பல நுணுக்கங்களை எவ்வாறு வெளிப் படுத்த வேண்டும் என்பது விற்பனைக்கு முக்கியமான ஒன்று. அதனை திறம்பட கற்றுக்கொண்டால் எந்த தொழிலையும் எந்த வயதிலும் மிகச்சிறப்பாக செய்யலாம் என்கிறார் ஆரண்ய அல்லி.
– தனுஜா ஜெயராமன்

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு