பெருங்கார்… வெள்ளைப்பொன்னி…தங்க சம்பா… இயற்கை விவசாயம்..

சுற்றி கான்க்ரீட் வீடுகள் நடுவே நெற் பயிர்கள்!.

விவசாயம் என்பதே ஒரு காலத்தில் இயற்கை விவசாயம்தான். பெண்ணின் உடலில் தோன்றும் மாறுபாடுகளைப் போலவே தாவரங்களிலும் உருவாகும் வளர்ச்சி நிலைகளை அவதானித்து, மண்ணைக் கீறிப் பொன்னை அள்ளும் விவசாயம் எனும் தொழில்நுட்பத்தை இயற்கையோடு இணைந்ததாகவே பெண் உருவாக்கினாள். இயற்கையின் பகுதியான மனிதன், தாவரங்களைப் பயிர் செய்யும் விவசாயத் தொழில்நுட்பங்களை இயற்கையாக அமைத்ததில் எந்த வியப்பும் இல்லை. மானுட குலத்தின் வளர்ச்சி, தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ஆகியவை நவீன விவசாய உத்திகளைக் கைகொண்ட போது மண்ணை மலடாக்கும் செயற்கை உரங்களை, பூச்சிகொல்லிகளை பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதன் வீரியம் இன்னதென தெரியாத காலம் அது. இன்று இயற்கை விவசாயமே மண்ணைக் காக்கும் மாபெரும் தொழில்நுட்பம் என்ற புரிதல்
உருவாகியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நூத்தஞ்சேரி கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்திருக்கிறார் விவசாயி தீனதயாளன்.
சுற்றிலும் கட்டடங்களும் தார்சாலையும் ஐ.டி கம்பெனிகளும் நிறைந்த இடத்துக்கு நடுவே, பச்சையம் பூசிய நிலமாக இருக்கிறது வயல்வெளி. அங்கு வேளாண் பணியில் இருந்த தீனதயாளனை சந்தித்தோம். ‘நாட்டுமாடுகள், பாரம்பரிய நெல் வகைகள், பூச்சி மருந்துகள் இல்லாமல் விவசாயம் இதெல்லாம் நமது மண்ணில் ஏற்கெனவே இருந்ததுதான். நாம் மறந்து போன அந்தப் பாரம்பரியத்தை நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றவர்கள் நமக்குக் கற்பித்தனர். அவர்கள் வழியில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்லும் விதமாகத்தான் செலவில்லாமலும், குறைந்த நீர் பாசனத்திலும் பாரம்பரிய நெல்ர கங்களை பயிரிட ஆரம்பித்தேன்’ என்று பேசத் தொடங்கினார்.

பாரம்பரிய ரகங்களைப் பயிரிட வேண்டுமென்றால் பாரம்பரிய விதைநெல் வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் பாரம்பரிய விவசாயம் நடந்தாலும் எங்கு விதைநெல் வாங்குவது என்ற குழப்பம் வேறு இருந்தது. ஆலங்குடி பெருமாள் அவர்களிடம் பாரம்பரிய நெல்களை வாங்கிப் பயிரிடத் தொடங்கினேன். ஆரம்பத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் வீட்டுத் தேவைக்கு மட்டும் ‘சேலம் சன்னா’ பயிரிட்டேன். அப்போதே எந்த செயற்கை உரமும்இல்லாமல் சாணம் கோமியம் கரைசலில் மட்டுமே விளைந்த பயிர்களின் மகசூல் அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த போகத்திலேயே எனக்கு சொந்தமான 13 ஏக்கரிலும் பாரம்பரிய நெல்லைப் பயிரிட்டேன். இப்படித்தான் கடந்த 13 வருடமும் விவசாயம் செய்து வருகிறேன்.

பாரம்பரிய விவசாயத்தைப் பொருத்தவரை மண் எந்த அளவுக்குச் சரியாக இருக்க வேண்டுமோ, அதைப்போலவே விதைநெற்களும் சரியானதாக இருக்க வேண்டும். விதைநெல் தேர்ந்தெடுப்பதில் இருந்து மண்ணை விவசாயத்துக்குத் தயார் படுத்துவது வரை அனைத்துமே தரமாக இருந்தால் மட்டும்தான் இயற்கை விவசாயம் சாத்தியம். ஏனென்றால், பாரம்பரிய விதைகளையும் பூச்சி மருந்துகள் வழி பயிரிடுபவர்கள் இருக்கிறார்கள். எனது நிலத்தில் நெல் பயிரிடுவதற்கு முன்பாகவே மண்ணின் தரத்தைக் கூட்டுவதற்காக தக்க பூண்டு, சணப்பை போன்றவற்றை விதைத்து 45 நாட்கள் கழித்து மடக்கி உழுது தழை உரமாகப் பயன்படுத்துகிறேன். பிறகு பாரம்பரிய நெல்களைப் பயிரிட்டு ஒவ்வொரு பருவத்திலும் சாணம் கோமியம் கழிவுகளுடன் வெல்லம் மற்றும் புண்ணாக்கு சேர்த்துக் கரைசலாக மாற்றி, பின்னர் வயலுக்கு நீர் பாசனத்துடன் சேர்த்து வேக்யூம் முறையில் பயிருக்கு பாசனம் செய்து வருகிறேன். இவ்வாறு செய்வதன் மூலமாகத்தான் தரமான இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முடியும். அதில் சாதிக்கவும் முடியும்.

இந்த முறை, 4 ஏக்கருக்கு பெருங்காரு, 5 ஏக்கருக்கு வெள்ளை பொன்னி, 4 ஏக்கருக்கு தங்க சம்பா போன்ற நெல்கள் பயிரிட்டுள்ளேன். போன முறை சேலம் சன்னா, குள்ளக்காரு, சீரகச்சம்பா மகராஷ்ட்ராவின் பாரம்பரிய நெல்லான இந்திராணி போன்ற நெல்களையும் பயிரிட்டு நல்ல மகசூல் பார்த்தேன். பாரம்பரிய விதைகள் பயிராகுவதற்கு 120-லிருந்து 150 நாட்கள் வரை ஆகலாம். ஆனால், மக்களுக்கும் வரும் தலைமுறைக்கும் சத்து மிகுந்த உணவை அளிக்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது. எனது வயல் ஊருக்கு நடுவில் அனைவரும் பார்க்கும்படிதான் இருக்கிறது. எனது விவசாய முறையை அனைவரும் பார்த்துவருகிறார்கள். 6 அடி வரை பெருங்காரு வளர்ந்திருக்கிறது. எந்த செயற்கை உரத்தாலும் சாத்தியம் இல்லை. இதன் வளர்ச்சிக்கும் அதிக மகசூலுக்கும் காரணம் பசு மாடுகளின் கோமியம் தான். எனது பண்ணையில் காங்கிரச், தார்பார்க், உமலஞ்சேரி போன்ற 20க்கும் மேல் நாட்டு பசுமாடுகள் வளர்க்கிறேன். இந்த மாடுகளின் கோமியம் நீர்ப்பாசனத்தோடு வயல்களுக்கு போகும்படி தான் அதன் கொட்டகைகள் வடிவமைத்திருக்கிறேன். இந்த மாதிரியான முறையில் பயிர்கள் வளர்வதால் தான் பயிரின் அளவும் மகசூலும் அதிகமானதாக இருக்கிறது.

இந்த முறை விவசாயத்தில் கிடைக்கிற பயிர்களை, தரகர்களிடம் கொடுப்பது இல்லை. சந்தைக்கும் விற்பது கிடையாது. பாரம்பரிய விவசாயத்தில் நேரடியான வருமானம்தான் சிறந்தது. அதைத்தான் நானும் செய்து வருகிறேன். மொத்த பயிர்களையும் அறுவடை முடிந்த பிறகு காயவைத்து தேவைக்கேற்ப அரைத்து சிறிதுசிறிதாக வீட்டிலையே விற்பனை செய்து வருகிறேன். இந்த முறையில் விற்பனை செய்யும் போது சத்தான உணவு நேரடியாக வாடிக்கையாளர்களிடம் செல்கிறது. அதேபோல், பாரம்பரிய அரிசியை பற்றிய புரிதல்களும் நேரடியாக மக்களுக்குத் தெரியவருகிறது. பாரம்பரிய அரிசியில் மருத்துவ பயனையும் தாண்டி சாப்பிடும்போது சுவையாக இருக்கிறது என்று பலர் சொல்கிறார்கள். அதற்காகவே வாங்கியும் செல்கிறார்கள். கடைக்கு சென்று அரிசியை வாங்கி சாப்பிட்டவர்கள் இப்போது நேரடியாக விவசாயியை தேடிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை விவசாயத்தின் வெற்றியாகத்தான் இதை பார்க்கிறேன்’ என்றார்.
தொடர்புக்கு:
தீனதயாளன் – 94440 70016.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா