பாரம்பரியம் காக்கும் இயற்கை பண்ணை!

இன்றைய நவீன வாழ்வில் நாம் பல புதிய வசதிகளைப் பெற்றிருக்கிறோம். அதேநேரம் பல நல்ல விசயங்களை இழந்திருக்கிறோம். இயந்திரத்தனமாக வாழ்க்கையை இன்று நாம் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நல்ல காற்று, நல்ல உணவு, நல்ல உறவுகள் இன்றி தவிக்கிறோம். இந்த நிலையில் நாம் இழந்த பல நல்ல அம்சங்களை நினைவு கூறும் வகையில் சில சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அரங்கேறி விடுகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் பூரியம்பாக்கம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அந்த வகையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது.ஆர்கானிக் உணவுக்கலாச்சாரத்தை வலியுறுத்தி வரும் அக்‌ஷய கல்பா என்ற அமைப்பு இந்த கிராமத்தில் முழுக்க முழுக்க இயற்கை முறையிலான விவசாயப் பண்ணையை நிர்வகித்து வருகிறது. இந்தப் பண்ணை இயற்கை விவசாயம் குறித்து நேரில் அறிந்து விளங்கிக்கொள்ளும் வகையில் பல்வேறு களப்பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக உணவு தினத்தை முன்னிட்டு, இந்த கிராமத்தில் உள்ள இயற்கை பண்ணையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது.

வயல் முழுக்க கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் பயிரிடப்பட்டு இருக்கின்றன. அவற்றின் இடையே நடவுக்காக தயார் செய்யப்பட்ட நிலம், மீன் வளர்ப்புக்குளம் உள்ளிட்ட இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை எருதுகள் பூட்டிய மாட்டு வண்டியில் சென்று பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், நடவுக்காக தயார் செய்யப்பட்ட சேற்று வயலில் இறங்கி நடந்து பார்த்து நமது முன்னோர்களின் உழவு அனுபவத்தை நேரில் அனுபவித்தனர். பண்ணையில் நுழைபவர்களுக்கு கேழ்வரகு கூழ், மரவள்ளிக்கிழங்கு போன்ற நம்மூர் பாரம்பரிய உணவு வகைகள் வழங்கப்பட்டன. அதேபோல மதிய உணவாக பாரம்பரிய அரிசி வகைகளில் செய்யப்பட்ட சமைக்கப்படாத உணவுகள், சிறுதானிய இனிப்புகள், நாட்டுச்சர்க்கரை பாயசம் போன்றவை வழங்கப்பட்டன. வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மாட்டினங்களைக் கொண்ட பண்ணையை நேரில் பார்த்து கால்நடை வளர்ப்பு குறித்து தெரிந்துகொண்டனர். மொத்தத்தில் அன்றைய நாள் நமது பாரம் பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் நாளாக அனைவருக்கும் அமைந்தது. 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு