மண்ணையும் வளப்படுத்துகிறது…மனதையும் வளப்படுத்துகிறது…இயற்கை விவசாயத்தால் பெருமிதம் கொள்ளும் பேராசிரியர்!

இயற்கை விவசாயம் மற்றும் பாரம் பரிய நெல் ரகங்கள் குறித்து இன்று பலருக்கு விழிப்புணர்வு உருவாகி இருக்கிறது. இதனால் இயற்கை விவசாயம் செய்யவும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடவும் இன்று பல தரப்பினரும் முன்வருகிறார்கள். அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரான வேணுகோபால் என்பவர் கடந்த 15 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு காலைப்பொழுதில் பேராசிரியர் வேணுகோபாலைச் சந்தித்தோம். “எனது தந்தை பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வந்தார். அவருடன் சேர்ந்து நானும் விவசாயப் பணிகளைக் கவனிப்பேன். கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்த நான், கடந்த வருடம் தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பயரிட்டு வந்த நாங்கள், பசுமைப் புரட்சியின்போது புதிய கண்டுபிடிப்பு ரக நெல்களைப் பயிரிட்டோம். கடந்த 15 வருடமாக மீண்டும் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகிறோம். எனக்குச் சொந்தமாக சுமார் 1 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் தூயமல்லி, சீரகச்சம்பா, கட்டிச்சம்பா உள்பட பல்வேறு நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறேன்.

கல்லூரிக்குச் செல்வதற்கு முன், வயலுக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது போன்ற பணிகளைச் செய்வேன். கல்லூரி முடிந்து வந்தபிறகு வயலில் சில வேலைகளைச் செய்வேன். வயல் வேலை செய்யும்போது மனது லேசாக மாறிவிடும். நான் சாகுபடி செய்து வரும் பாரம்பரிய நெற்பயிருக்கு ஒருபோதும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது இல்லை. இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். பயிர்களுக்குத் தேவையான உரத்திற்காகவும், வீட்டில் பால் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வருகிறேன். பசுமாடுகள் மூலம் கிடைக்கும் சாணத்தை வயலில் அடி உரமாக பயன்படுத்துவேன். அதனுடன் தழைச்சத்துக்காக எனது வீட்டைச் சுற்றி நிற்கும் வேப்பமரம், புங்கை மரங்களில் உள்ள தழைகளை வெட்டி, வயல்களில் போடுவேன்.

நிலத்தில் களை முளைத்தால் நாங்கள் களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவது இல்லை. களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் வயல்களில் களை வளராதுதான். ஆனால் மண்ணின் வளம் கெட்டுப்போகும். நெற்பயிர் நன்றாக வளருவதற்கு கடலைப் புண்ணாக்கைப் பொடித்து உரமாகப் பயன்படுத்தி வருகிறேன். வேப்பம்புண்ணாக்கும் பயன்படுத்துவேன். வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்தும்போது நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் இருக்காது. நெற்கதிர்கள் வரும்போது நெல்லில் பால் கட்டும். அந்த நேரத்தில் ஒருவகை பூச்சி (பச்சாளை) அந்த பாலைக் குடிக்கும். இதனால் நெல் பதராக மாறிவிடும். இதற்கு விவசாயிகள் உரக்கடைகளில் இருந்து மருந்து வாங்கி தெளிப்பார்கள். இந்தப் பூச்சிக்காக நான் மருந்து தெளிப்பது கிடையாது. வேப்பம்புண்ணாக்கை போடுவேன். பூச்சி தொந்தரவு குறையும். இதுதவிர வீட்டைச் சுற்றி காலியாக உள்ள இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறேன். இதில் வெண்டைக்காய், மிளகாய், கத்தரிக்காய், கொத்தவரங்காய், பீர்க்கங்காய், பெரிய மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துவருகிறேன்.

இதற்கும் மாட்டுச்சாணம், வேப்பம்புண்ணாக்கு, கடலைப்புண்ணாக்கு ஆகியவற்றைத் தண்ணீரில் கலந்து ஊற்றி வருகிறேன். இதில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை நான் வீட்டுப் பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்வேன். எங்களது தேவைக்குப் போக மீதமுள்ள காய்கறிகளை எனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்துவிடுவேன். இதேபோல எனது வயலில் கிடைக்கும் நெல்லை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். உறவினர்களுக்கும் கொடுத்து வருகிறேன். விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்யும்போது மகசூல் அதிகமாக கிடைக்கும். ஆனால் இயற்கை விவசாயம் செய்யும்போது மகசூல் என்பது குறைவாகத்தான் கிடைக்கிறது. ஆனால் இயற்கை விவசாயம் செய்யும்போது மண்வளம் நன்றாக இருப்பதுடன், நல்ல உணவு கிடைத்த மனதிருப்தி கிடைக்கும்’’ என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
வேணுகோபால்: 94427 88711.

அமாவாசைக்கு முந்தைய நாள்

இயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயிகளும், ரசாயன உரங்கள் பயன்படுத்தும் விவசாயிகளும், பூச்சி மருந்துகளை அமாவாசைக்கு முந்தைய நாள் அடிக்க வேண்டும். பெரும்பாலும் அமாவாசை அன்று தத்துப்பூச்சிகள் முட்டையிடுவதற்கு வரும். நாம் முந்தைய நாள் பூச்சி மருந்து அடித்து இருப்பதால், வயலில் தத்துப்பூச்சி வருவது தடுக்கப்படும் என வேணுகோபால் டிப்ஸ் தருகிறார்.

900 கிலோ நெல் உற்பத்தி

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. கடந்த கும்பப்பூ சாகு படியின்போது பாரம்பரிய ரகமான தூயமல்லி ரகம் பயிரிட்டு இருந்தேன். 75 சென்ட் நிலத்தில் இருந்து 900 கிலோ நெல் கிடைத்தது. தூயமல்லி ஒரு சன்னரக நெல். அரிசி நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். இதில் உணவு தயாரித்து சாப்பிடும்போது சுவையும் மணமும் அட்டகாசமாக இருக்கும். தூயமல்லி அரிசியை வேக வைத்து வடிக்கும்போது கிடைக்கும் அன்னப்பால் தனிச்சுவையாக இருக்கும். இதனால் எனது வீட்டில் தினமும் அன்னப்பால் எடுத்து நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் என்ற தகவலையும் பேராசிரியர் வேணுகோபால் பகிர்ந்துகொண்டார்.

 

Related posts

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!

பதிப்பகத்துறையில் தடம் பதிக்கும் சாதனைப் பெண்மணி!