இயற்கை முறையில் பாகற்காய் சாகுபடி!

ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பார்கள். எதை எதையோ விதைத்துப் பார்ப்பார்கள். ஆனால் அத்தனையும் நஷ்டம் என பலர் புலம்புவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். சிறிய அளவே நிலம் இருந்தாலும், சீரிய திட்டமிடலால் அமோக லாபம் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தஞ்சை மாவட்டம் சின்னையன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த இளையராஜா இதில் இரண்டாவது ரகம். தனது அரை ஏக்கர் நிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கொடிப் பாகற்காய் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். அதிலும் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவித்து அசத்தி வருகிறார். பாகற்காய் வயலில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளையராஜாவைச் சந்தித்தோம். “நான் சுமார் 25 ஆண்டுகளாக தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், கத்தரி, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துவருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக கொடிப் பாகற்காயை மட்டுமே சாகுபடி செய்துவருகிறேன். நஞ்சில்லா உணவு குறித்து பலர் கூறி வருகிறார்கள். அதை நாமும் உருவாக்கலாமே என முடிவெடுத்து முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன்’’ என பேச ஆரம்பித்த இளையராஜா, பாகற்காயின் சாகுபடி விவரம் குறித்து விளக்கினார்.

“பாகற்காய் சாகுபடி செய்வதற்கு முதலில் நிலத்தை நன்றாக 6 முறை உழவு செய்ய வேண்டும். அதன்பிறகு உழவு செய்த நிலத்தில் தொழுவுரத்தைத் தெளிப்போம். அரை ஏக்கருக்கு 20 டன் தொழுவுரம் தேவைப்படும். தொழுவுரம் தெளித்த பிறகு 4 முறை உழவு ஓட்டுவோம். இப்போது மண்ணும், உரமும் நன்றாக கலந்திருக்கும். கடைசி உழவுக்கு பிறகு 45 நாட்களுக்கு நிலத்தை அப்படியே போட்டு வைப்போம். இதனால் உரத்தின் சாரம் நிலத்தில் நன்றாக இறங்கி மண் சத்தானதாக மாறிவிடும். இவ்வாறு செய்தபிறகு பாகற்காய் விதைகளை வாங்கி வந்து ஒன் யூஸ் கப்பில் பதியன் இடுவோம். அதாவது டீ கப்பில் தேங்காய் நார்க்கழிவை நிரப்பி, அதில் பாகற்காய் விதையை ஊன்றி வைப்போம். விதை ஊன்றியது மே ஒரு மூடாக்கு போட்டு மூடுவோம். 3 நாட்களில் அதில் இருந்து செடி முளைக்கும். அப்போது மூடாக்கை எடுத்து விட்டு வெயில் படுமாறு செடிகளை திறந்த நிலையில் வைப்போம். இந்தச் செடிகளில் காலை மற்றும் மாலைநேர வெயில் மட்டுமே பட வேண்டும். உச்சி வெயிலில் செடிகள் கருகிவிடும்.

15வது நாளில் டீ கப்பில் இருந்து செடிகளைப் பிடுங்கி, நிலத்தில் நடவு செய்வோம். அப்போது நிலத்தில் 8 அடிக்கு ஒரு பார் அமைத்து, அந்த பாரில் 3 அடிக்கு ஒன்று என்ற கணக்கில் செடிகளை நடுவோம். சிறிய அளவில் குழியெடுத்து நட்டாலே போதும். நடவுக்குழியில் மண்புழு உரம் அல்லது வேப்பம்புண்ணாக்கு போட்டால் செடிகள் நன்கு வளரும். நடவுப்பணியை மாலைநேரத்தில் 4 மணிக்கு மேல் செய்தால் நன்றாக இருக்கும். அந்த சமயத்தில் நட்டால் செடிகள் வாடாது. மதிய நேரத்தில் நட்டால் செடிகள் வாடி சேதம் ஏற்படும். நடும்போது ஒரு பாசனம் செய்வோம். பாகற்காய் செடிக்கு மிதமான ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக காய்ச்சலும் இருக்கக்கூடாது. அதிக ஈரத்தன்மையும் இருக்கக்கூடாது. 60 சதவீதம் ஈரத்தன்மை இருந்தாலே போதும்.

செடி நட்ட 10வது நாளில் பந்தல் அமைக்க வேண்டும். செடி நடவுக்கு முன்பே கூட பந்தல் அமைத்துக்கொள்ளலாம். இதற்கு கல் கால் பந்தல் அமைத்தால் நீண்ட நாட்களுக்கு பலன் தரும். ஆனால் அதற்கு செலவு கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். இதனால் நான் மரக்கால் பந்தல் அமைத்திருக்கிறேன். அதாவது மூங்கில் கம்புகளை ஊன்றி, அதில் 14 எம்எம் கம்பிகளைக் கட்டி பந்தல் அமைத்திருக்கிறேன். பந்தல் அமைத்தவுடன் பாகற்காய் செடிகளில் சணலைக் கட்டி, பந்தலில் ஏற்றி விட வேண்டும். அதாவது செடியில் சணலைக் கட்டி, சணலை பந்தல் கம்பியில் கட்ட வேண்டும். செடி நன்றாக ஏறி பந்தலில் படருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காய் செடியானது சணல் கயிற்றின் மூலம் மேலே பரவி பந்தல் முழுவதும் படர்ந்துவிடும்.

பாகற்காய் செடியில் புழு, பூச்சித் தாக்குதல் இருக்கும். கவனிக்காமல் விட்டால் மகசூல் பாதிப்பு அடையும். புழு, பூச்சிகளைக் கட்டுப்படுத்த அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாயிகளைத் தொடர்புகொண்டு அவர்கள் பரிந்துரைக்கும் முறைகளைக் கையாள்கிறேன். பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம் பயன்படுத்துகிறேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகைக் கரைசலைத் தெளிக்கிறேன். முழுக்க முழுக்க தொழுவுரத்தைப் பயன்படுத்தினாலே பூச்சித் தாக்குதலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். பாகற்காயில் பழ ஈக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறிகளை ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறேன். அதில் இருக்கும் ஒரு திரவத்தின் வாசனை, பெண் ஈ வாசனை போல் இருக்கும். இந்த வாசத்தில் மயங்கி ஆண் ஈ வந்து பொறியில் விழுந்து இறந்துவிடும். பாகற்காய் நன்கு விளைந்து வரும் நேரத்தில் காய்ப்புழுக்கள் வரும். இதுபோன்ற புழுக்களையும், மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்த தக்காளியை ஊடுபயிராகப் பயிரிட்டு இருக்கிறேன். பாகற்காயை தாக்க வரும் புழு, பூச்சிகள் தக்காளியை மட்டுமே தாக்கிவிட்டு சென்றுவிடும்.

இதுபோன்ற பராமரிப்புகளை செய்து வரும் பட்சத்தில் 52வது நாளில் இருந்து பாகற்காய்களை அறுவடை செய்யலாம். அதில் இருந்து 110 நாட்களுக்கு அறுவடையைத் தொடரலாம். நான் எனது பந்தலை 3 பகுதிகளாக பிரித்து தினந்தோறும் ஒரு பகுதியில் காய் பறிக்கும் வகையில் திட்டமிடுகிறேன். எனக்கு நாளொன்றுக்கு சராசரியாக 300 கிலோ மகசூல் கிடைக்கிறது. 110 நாட்களுக்கும் 33 டன் மகசூல் கிடைக்கிறது. அறுவடை செய்த காய்களை தஞ்சாவூர் பெரிய மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ காய்க்கு சராசரியாக ரூ.10 விலை கிடைக்கிறது. இதன்மூலம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் வருமானமாகக் கிடைக்கிறது. இதில் பந்தல், உழவு, பராமரிப்பு, அறுவடை என ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. மீதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லாபமாகக் கிடைக்கிறது. எனது வயல் முழுக்க இயற்கையான பராமரிப்பு கொண்ட வயல் என்பதால், இதில் விளையும் பாகற்காய் தனித்துவம் மிகுந்ததாக இருக்கிறது. இதை வியாபாரிகள் விரும்பி வாங்குகிறார்கள். உழவர் சந்தை போன்ற இடங்களில் நானே நேரடியாக விற்பனை செய்தால் நிச்சயம் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிக அளவில் எடுத்துச் செல்வதாலும், விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாலும் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்று விடுகிறேன். பணம் எனக்கு மொத்தமாகக் கிடைத்து விடுகிறது’’ என்கிறார் இளையராஜா.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்