நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ‘பந்த்’: அகில இந்திய மாணவர் அமைப்பு ஆதரவு

திருப்பதி: நாடு முழுவதும் வரும் 4ம்தேதி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கல்வி நிறுவனங்களில் பந்த் நடத்துவதற்கு அகில இந்திய மாணவர் அமைப்பு ஆதரவளிப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கூறினார். அகில இந்திய மாணவர் அமைப்பின் பொதுச்செயலாளர் தினேஷ் ரங்கராஜ் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.எப்) தேசியக்குழு கூட்டம் கடந்த ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருப்பதி பைராகிபட்டிடா கந்தமனேனி சிவய்யா பவனில் நடைபெற்றது. அப்போது, ​​நாடு முழுவதும் கல்வித்துறையில் வரும் மாற்றங்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து தேசியக் குழுக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. தேசிய தேர்வு முகமை நடத்திய ‘நீட்’ தேர்வு முடிவு, வினாத்தாள் கசிவு காரணமாக 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்துள்ளது.

தேர்வுத்தாள் கசிவு காரணமாக மத்திய அரசு தேர்வை ரத்து செய்து மறுசீரமைக்கக்கோரி நாடு தழுவிய அளவில் கே.ஜி., முதல் பி.ஜி வரையிலான கல்வி நிறுவனங்களில்பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு, இடதுசாரி முற்போக்கு மாணவர் சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சட்டமன்றம் போல் அனைத்து மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் கொண்டு வர வேண்டும். எனவே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வரும் 4ம்தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் அமைப்பினர் ஈடுபட உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர்

டெல்லி ராஜதானி கல்லூரியில் உதவி பேராசிரியர்கள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை