தேசிய பாதுகாப்பு படையினர் சென்னையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து ஒத்திகை: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை: பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், சென்னையில் தீவிரவாதிகள் போல் அடுத்தடுத்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும், பணய கைதிகளாக மக்களை பிடித்து தேசிய பாதுகாப்பு படை சார்பில் 3 நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படை சார்பில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஐதராபாத், அமிர்தசரஸ், காந்தி நகர், கோவா, கவுகாத்தி, போபால், திருவனந்தபுரம் மற்றும் லக்னோவில் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு ஒத்திகை நடந்துள்ளது.

அந்த வகையில் தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னையில் எந்த இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது, பொதுமக்களை பணய கைதிகளாக பிடிக்க உள்ள நட்சத்திர ஓட்டல், வணிக வளாகத்தில் பிடித்து வைப்பது என்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் ‘காந்திவ்-5’ என்ற ஒத்திகை பயிற்சி நடத்துகிறது. சென்னை பெருநகளில் 7 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒத்திகை மற்றும் 3 இடங்களில் ஒன்றின் பின் ஒன்றாக வெடிகுண்டுகள் வெடிக்க வைத்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் சென்னை மாநகர காவல்துறை, தமிழ்நாடு கமாண்டோ படை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சென்னை மாநகராட்சி, வருவாய்துறை, மருத்துவ துறை மற்றும் பிற அரசு துறைகளுடன் இணைந்து நிலையான செயல்பட்டு நடைமுறைகளின் படி நடத்தப்படுகிறது.

இந்த ஒத்திகை பயிற்சியில் முதற்கட்டமாக ‘பயங்கரவாத எதிர்ப்பு’ பயிற்சி இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி நாளை காலை 8 மணிக்கு முடிவடையும். இரண்டாம் கட்டமாக ‘கவுண்டர் ஹாய்-ஜாக்’ பயிற்சி நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி 17ம் தேதி காலை 6 மணிக்கு முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது காவல்துறையின் நெருக்கடி கால திறன் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் வழக்கமான பயிற்சி தான். இந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கவுண்டர் ஹாய்-ஜாக் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் சென்னையில் நடைபெறும் போது, பொதுமக்கள் யாரும் பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். இதுதொடர்பாக தகவல் பறிமாற்றத்திற்கு சென்னை மாநகர காவல்துறையின் அவசர உதவி எண் 100, 101,112 மற்றும் 044-2345359 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை மாநகர காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

* சென்னை சிகப்பு மண்டலமாக அறிவிப்பு
சென்னை மாநகர காவல் எல்லையில் 3 இடங்களில் ஒன்றின் பின் ஒன்றாக வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடக்கிறது. இதனால் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்கள் ‘சிகப்பு மண்டலமாக’ காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் வரும் 17ம் தேதி வரையில் டிரோன் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி யாரேனும் டிரோன் பறக்க விட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி!!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்