மாற்று திறனாளிகள், வயதுமூப்பால் பாதித்தோருக்கான சாதனங்களை உருவாக்கும் உதவும் நல்வாழ்வு தொழில் நுட்பங்களுக்கான தேசிய மையம்: சென்னை ஐ.ஐ.டியில் தொடக்கம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி யில் மாற்று திறனாளிகள் மற்றும் வயதுமூப்பால் பாதிக்கப்பட்டோருக்கான சாதனங்களை உருவாக்கும் ‘உதவும் நல்வாழ்வுத் தொழில் நுட்பங்களுக்கான தேசிய மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி, உதவும் நல்வாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான தேசிய மையத்தைத் தொடங்கியுள்ளது. உதவும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் முன்முயற்சியாக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைமை இயக்குநருமான ராஜீவ் பால் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளர் ராஜீவ் பால் கூறுகையில்: உதவி சுகாதார தொழில்நுட்பத்திற்கான தேசிய மையம் உதவி தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டு குறைபாடுகள் உள்ள நபர்களின் வாழ்க்கையை மாற்ற ஆற்றல் கொண்ட இது பயனர்கள், டெவலப்பர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில்: உடல் சவால்கள் உள்ளவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய, உள்ளடக்கிய கல்வியில் ஐஐடி மெட்ராஸ் உறுதியாக இருந்து வருகிறது. இந்த மையத்தின் அனுபவ சூழல், நமது முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பயன்பாட்டிற்கு உருவாக்குவோர், பயன்பாட்டிற்கு கொள்கை வகுப்போர் இடையே ஒரு தளமாக இந்த மையம் செயல்படும். அதே நேரத்தில் உதவும் தொழில்நுட்பம், மறுவாழ்வு வல்லுநர்கள், தன்னார்வ நிறுவனங்களுக்கு பயிற்சிக் களமாகவும் இயங்கும். முதன்மையான இயக்கக் குறைபாடுகள் மீது கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் செயல் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா, சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத்தின் தலைவர் சுஜாதா சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நைனாமலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!