மலராத தேசிய கட்சியில் மாநில தலைவர் பதவியை பிடிக்க நடக்கும் குஸ்தி பல கோஷ்டிகளை உருவாக்கியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மீதி உள்ள ஆதரவாளர்களையும் இழுக்கும் முயற்சி நடப்பதால் சேலத்துக்காரர் மீது உச்சகட்ட கோபத்தில் மாஜி அமைச்சர் இருக்கிறதா சொல்றாங்களே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியில் நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ இருந்து வருகிறாரு.. நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தை சேர்ந்த வைத்தியானவரின் ஆதரவாளர்கள் பலர் சேலத்துக்காரர் அணிக்கு சென்றுவிட்டாங்க.. இவர்களை தங்கள் பக்கம் மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகள் தற்போது திரைமறைவில் நடந்து வருகிறதாம்… இதற்காக வைத்தியானவர் தனி டீம் ஒன்று அமைத்துள்ளாராம்..

இந்த டீம், சேலத்துக்காரர் அணியில் ஐக்கியமானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வர்றாங்களாம்.. விரைவில், தனது ஆதரவாளர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்கள் என்று வைத்தியானவர் நம்பிக்கையுடன் இருந்து வருகிறாராம்.. இதை சுதாரித்துக்கொண்ட சேலத்துக்காரர் டீம், வைத்தியானவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் டெல்டா மாவட்டத்தில் மீதமுள்ள வைத்தியானவரின் ஆதரவாளர்களுக்கு ‘விட்டமின் ப’ கொடுத்து இழுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாம்..

இந்த தகவல் தெரிய வந்ததும் வைத்தியானவர், சேலத்துக்காரர் டீம் மீது மீண்டும் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அதியமான் கோட்டை மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜிக்கு எதிராக ஒரு குரூப் அதகளம் செய்தது சேலத்துக்காரருக்கு எதிரான மூவ்மென்ட்டாமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பார்லிமென்ட் தேர்தல் தோல்விக்கு பிறகு சேலத்துக்காரர் மீதான அதிருப்தி இலைகட்சியில் ஆங்காங்கே தலைகாட்ட ஆரம்பிச்சிருக்காம்..

இது அவருக்கு நெருக்கமான மாஜிக்கள் நடத்தும் கூட்டத்திலும் வெடிச்சு கிளம்புதாம்.. சமீபத்தில் அதியமான் கோட்டை மாவட்ட இலைகட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாஜி அன்பான அழகர் தலைமையில் நடந்ததாம்.. அப்போது இளைஞரணி நிர்வாகி திடீரென ‘‘பரம்பரையாக கட்சியில் இருக்கும் எங்க குடும்பத்திற்கு எந்த பொறுப்பும் இல்ல. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வந்த இவருக்கு எல்லா பொறுப்பும் குடுத்திருக்காங்க.. இது உங்களுக்கு எல்லாம் தெரியுமான்னு ஏகத்தும் காட்டமானாராம்..

அவருக்கு சப்போர்ட்டா மாநில விவசாயி அணி செயலாளரு, மாஜி எம்எல்ஏன்னு பெரும் கூட்டமே குரல் கொடுத்துச்சாம்.. இதனால் காட்டமான மாஜி, ‘மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டியது பொதுச் செயலாளரின் பணி. எனது ஒர்க் சரியில்லை என்றால், இரண்டு அல்ல மூன்றாகவே மாவட்டத்தை பிரிக்கலாம். என்னை எடுத்து விட்டு வேறு ஒரு நபரை மாவட்ட செயலாளராக போட்டால் கூட, நான் சாதாரண உறுப்பினராக இருந்து கடைசி வரை உழைப்பேன்.

பதவி சுகம் அனுபவித்து விட்டு, இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்ய மாட்டேன்னு’ என்று விம்மினாராம்.. இதை கண்ட மூத்த நிர்வாகிகள், இது மாவட்ட மாஜிக்கு எதிரான மூவ்மென்ட் இல்ல. ஜெனரல் செகரட்டரியான சேலத்துக்காரர் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு என்பது அவருக்ேக தெரியும்னு கிசுகிசுத்தாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘முழு நேர நிர்வாகியை நியமித்தாலும் நெருக்கடிகளை தவிடுபொடியாக்கி புன்னகையில் உலாவுகிறாராமே புல்லட்சாமி எப்படி..?’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஆளுங்கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல் இன்னும் அடைபட்ட பாடில்லை. பாஜவில் அதிருப்தி கோஷ்டி தொடர்ந்து நீடித்தாலும் எந்த கவலையுமின்றி கூலாக உலா வருகிறார் புல்லட்சாமி. முழுநேர நிர்வாகியை ஒன்றிய அரசு நியமித்துவிட்ட நிலையில் ஆட்சி மாற்றம் நடக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் உலாவிய நிலையில் தினமும் பூரித்த புன்னகையுடன் சட்டசபைக்கு வந்து செல்கிறார் புல்லட்சாமி. அதற்கான காரணம் டீ பார்ட்டியாம்.. சமீபத்தில் நகர பகுதியில் இரவில் நடந்த டீ பார்ட்டியில் பாஜவை தவிர ஆளுங்கட்சி, எதிர் தரப்பு எம்எல்ஏக்கள் சிலரும் கலந்துகொண்டார்களாம்..

அப்போது சில அரசியல் விஷயங்கள் பரிமாறப்பட்டதாம்.. கடந்த காலத்தை போன்று ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு துணைபோக மாட்டோம் என்ற உறுதிப்பாடும் அளிக்கப்பட்டதாம்.. இதுதான் புல்லட்சாமியின் புன்னகைக்கான காரணம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.. அரசியலில் எத்தகைய நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி விடும் சாணக்கியர்தான் எங்க புல்லட்சாமினு அவரது கட்சிக்காரங்க மட்டுமின்றி புதுச்சேரிவாசிகளும் மார்தட்டி வருவதுதான் தற்போதைய ஹைலெட்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மலராத கட்சியில் மாநில தலைவர் பதவியை பிடிக்க நடக்கும் குஸ்திபற்றி சொல்லுங்க பார்ப்பபோம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அண்ணன் எப்போது நகர்வான், திண்ணை எப்போது காலியாகும்னு கிராமங்களில் ஊர் பெரியவர்கள் கூறுவது உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ.. மலராத தேசிய கட்சிக்கு ஏக பொருத்தமாம்.. அதாவது, மக்களவை தேர்தலில் தேசிய கட்சியின் மலையான தலைவரின் பேச்சால்தான் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இலை கட்சியின் கூட்டணியும் அவரால்தான் விரிசலானது.

எனவே அவரை மாற்ற வேண்டும்னு தேசிய கட்சியில் ஒரு பிரிவு கொடி பிடித்தாங்களாம்… அந்த பதவியை பிடிக்க தேசிய கட்சியின் தலைவர்கள் பலரும் குறிவைச்சிருக்காங்க.. ஏற்கனவே அல்வா ஊரின் எம்எல்ஏ மக்களவை தேர்தலில் 2 முறை போட்டியிட்டும் வெற்றி கிடைக்காத நிலையில் மாநில தலைவர் பதவிக்கு குறிவைச்சிருக்காரு.. கட்சியை கலைத்து விட்டு தேசிய கட்சியில் ஐக்கியமான நடிகரும், தனிக்கட்சி நடத்திய தனக்கு தான் மாநில தலைவர் பதவி என அவரது கட்சியினரை சூடேற்றியுள்ளாராம்..

தென் மாவட்டம் முழுக்க நடிகரின் ஆதரவாளர்கள் அடுத்த தலைவர் நாட்டாமை தான் என போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக கூறிட்டு வர்றாங்க.. இவர்கள் தவிர பெரிய பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் குதித்த பெண்மணியும், மற்றொரு பெண் எம்எல்ஏவும் தலைவர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்களாம்.. மேற்கு மண்டலத்தின் ஆதிக்கம் கட்சியில் அதிகமாகி விட்டது.

எனவே தென்மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கே இம்முறை முன்னுரிமை ெகாடுக்கனும்னு ஒரு குரூப் குரல் கொடுக்க ஆரம்பிச்சிடுச்சாம்.. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தேசிய கட்சியின் மாநில தலைவர் பதவியை பிடிக்க நடக்கும் குஸ்தி கட்சிக்குள் மேலும் பல கோஷ்டிகளை உருவாக்கி விட்டதாம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ரிக்டர் அளவுகோல் (Richter magnitude scale)

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து