தென்மாவட்ட சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி வழக்கு; சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கும் சேர்த்துதான் மக்கள் வாக்களிக்கின்றனர்: ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: ‘தமிழ்நாட்டு மக்களை அரசியல்ரீதியாக பார்க்கக் கூடாது. சட்டமன்றம் மட்டுமின்றி நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தான் மக்கள் வாக்களிக்கின்றனர்’ எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கனமழையால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. போக்குவரத்து முடங்கியது. ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர்.2013ல் உத்ரகாண்ட் வெள்ளம், 2014ல் ஆந்திரா மாநிலத்தில் ஹூட் புயல், 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை இயற்கை பேரிடர்களாக அறிவிக்கப்பட்டன.

இதன்படி, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி ஒதுக்கக்கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்படி, தேசிய பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் இருந்து, தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர். துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் ஆஜராகி, ‘‘15வது நிதிக்குழு அறிக்கையின்படியும், மாநில மற்றும் ஒன்றிய பேரிடர் நிவாரண நிதி தொடர்பான வழிகாட்டுதலின்படி ஒன்றிய அரசுத் தரப்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

மனுதாரர் வக்கீல் புஷ்பவனம் ஆஜராகி, ‘‘தேசிய பேரிடர் என நேரடியாக அறிவிக்க முடியாத நிலையில், மிகத் தீவிர பேரிழப்பு என அறிவித்தால் தான் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திற்கு தேவையான நிதி கிடைக்கும். எனவே, இதை முதலில் அறிவிக்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘இந்தியாவிலுள்ள அனைத்து குடிமக்களையும் ஒரே மாதிரியாகத் தான் பார்க்க வேண்டும். அனைவரும் இந்திய குடிமக்கள் தான். தமிழ்நாட்டு குடிமகன் என தனியாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சட்டமன்றத்திற்கு மட்டும் வாக்களிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கும் தான் வாக்களிக்கின்றனர். பலரும் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். உயிரும், மூச்சும் மட்டும் தான் மிஞ்சியுள்ளது. இவர்களிடம் பாரபட்சம் காட்டக் கூடாது. ஒன்றிய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. விதிகள், நடைமுறை, தகுதி என பார்க்காமல், பாதித்த மக்களைத்தான் பார்க்க வேண்டும். மக்களை மனிதாபிமான முறையில் தான் பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான பதில் மனுவை ஒன்றிய அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்