காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி இந்தியா கூட்டணியில் நீடிக்கிறது: உமர் அப்துல்லா விளக்கம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி இந்தியா கூட்டணியில் நீடிக்கிறது என அக்கட்சி தலைவர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்தியா கூட்டணியுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். இரு தேர்தலுக்கு இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது’’ என கூறினார். மேலும், மீண்டும் பாஜ கூட்டணிக்கு திரும்புவீர்களா என்பது குறித்து பரூக் அப்துல்லா அளித்த பதிலில், ‘‘மீண்டும் பாஜ கூட்டணிக்கு செல்வது குறித்து முழுமையாக மறுக்க முடியாது’’ என்றார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு வழக்கில் சமீபத்தில் தொடர்ந்து 2 முறை பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.

2 முறையும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பரூக் அப்துல்லாவின் மகனும் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா விடுத்துள்ள அறிக்கையில், ‘இன்னமும் நாங்கள் இந்தியா கூட்டணியில் தான் உள்ளோம். சில விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் உள்ள 6 மக்களவை தொகுதிகளில் 3 இடங்களை நாங்கள் கேட்டுள்ளோம். பாஜவை தோற்கடிக்க வேண்டுமென்பதுதான் எங்கள் அணியின் முக்கிய குறிக்கோள். ஒரே நேரத்தில் 2 படகில் பயணிக்க முடியாது’’ என கூறி உள்ளார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா