Friday, October 4, 2024
Home » நாட்டுப்பற்றை வளர்க்கும் தேசிய மாணவர் படை

நாட்டுப்பற்றை வளர்க்கும் தேசிய மாணவர் படை

by Nithya

மாணவப் பருவம் என்பது சவாலைத் தீவிரமாக எதிர்கொள்ளும் பருவம். சாகசங்களை அனாயசமாகச் செய்து மகிழும் தருணம். இவற்றிற்கு ஒரு நல்வாய்ப்பாகத் திகழ்வதுதான் தேசிய மாணவர் படை (National Cadet Corps-NCC ) என்கின்ற அமைப்பு. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த அமைப்பு 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 76 ஆண்டுகளாக வீரநடை போட்டு வருகிறது. இளையோர் சமுதாயத்திடம் நாட்டுப்பற்றை நாளும் வளர்க்கும் நல்லதொரு அமைப்பு என்சிசி ஆகும். மாணவர்களுக்கு இளம் பிராயத்திலேயே ஒழுக்கம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு, கட்டுப்பாடு ,தேசப்பற்று போன்றவற்றை கற்பித்து தலைசிறந்த குடிமகன்களாக உருவாக்குவதில் என்சிசி மிக முக்கிய பங்காற்றிவருகிறது. என்சிசி அமைப்பு இந்தியாவில் புது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய ஆயுதப்படைகளின் இளைஞர் பிரிவாகும். இது பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. இப்போதைய நிலவரப்படி என்சிசி 16 லட்சத்திற்கும் அதிகமான இளம் வீரர்கள் கொண்ட இளைஞர் இயக்கமாகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் அவர்களை நாட்டுப்பற்று மிக்க மனிதர்களாக ஆக்கு வதற்கும் ராணுவப் பயிற்சி தேவை என்கிற கருத்து பொதுமக்களிடையே உருவானது. இன்றைய இளைஞர்கள் தான் தேசத்தின் நாளைய தலைவர்கள். இன்றைய இளைஞர்கள் தான் தேசத்தின் அருஞ்செல்வம். அவர்களின் தரத்தில் தான் நாட்டின் மகத்துவம் அமைந்திருக்கிறது. எனவே, 1948ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை என்ற அமைப்பு தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் (UNITY AND DISCIPLINE) என்சிசி-யின் குறிக்கோளாக உள்ளது.

என்சிசி-யின் கொடி

என்சிசி அமைப்பின் கொடி 1951ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ராணுவத்தின் பயன்பாடுகளில் உள்ளது போல் அதே மாதிரி நிறம் மற்றும் அளவு கொடியானது என்சிசி-க்கு பயன்படுத்தப்பட்டது. இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் மையத்தில் என்சிசி பேட்ஜ் வைக்கப்பட்டிருக்கும். அதன்பின் 1954ல் தற்போது உள்ள மூவர்ணக் கொடி என்சிசி-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கொடியில் உள்ள மூன்று வர்ணங்கள் படையின் மூன்று சேவைகளை சித்திரிக்கின்றன. சிவப்பு- ராணுவப் படை ,அடர் நீலம்- கடற்படை, வெளிர் நீலம்-விமானப்படையையும் குறிக்கும். தாமரை மாலையால் சூழப்பட்ட கொடியின் நடுவில் தங்க நிறத்தில் என்சிசி என்கின்ற எழுத்துகள் கொடிக்கு வண்ணமயமான தோற்றத்தையும் தனி அடையாளத்தையும் தருகின்றன.

பயிற்சியின் அமைப்பு

என்சிசி 3 வருடப் பயிற்சித்திட்டம் கொண்டது. முதல் ஆண்டில் அறிமுகம் மற்றும் அணிவகுப்பு பயிற்சியும், இரண்டாம் ஆண்டில் அணி வகுப்பு பயிற்சி, சேவைப் பாடங்கள், பல்வேறு முகாம்கள், பி-சான்றிதழ் தேர்வும், மூன்றாம் ஆண்டில் அணிவகுப்புப் பயிற்சி, சேவைப் பாடங்கள், பல்வேறு முகாம்கள், சி-சான்றிதழ் தேர்வும் இடம்பெறும்.

சான்றிதழ் தேர்வுத் தரநிலை

மூன்று வருடப் பயிற்சியில் மதிப்பெண் 80 சதவீதம் அதற்கு மேல் இருந்தால் ஏ கிரேடு, 80 சதவீதத்திற்கும் கீழேயும் 65 சதவீதத்திற்கு மேலேயும் இருந்தால் பி கிரேடு, 50 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் சி கிரேடு என தரநிலை வரிசைப்படுத்தப்படும். என்சிசி பயிற்சியில் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் நல்ல பயிற்சியை, மனவலிமையைப் பெற உதவுகிறது.எந்தவிதமான, எதிர்பாராத, இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்த்துப் போராடும் மனத்திட்பத்தை, மனத்துணிவை வளர்த்தெடுக்க என்சிசி-யில் தரும் பயிற்சிகள் உதவுகின்றன. என்சிசி-யில் ராணுவப் படை, கப்பல் படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன.

துப்பாக்கிச் சுடுதல், தடைகளைத் தாண்டிச் செல்லுதல், வரைபடத்தைப் படித்து வழியைக் கண்டறிதல் போன்ற அடிப்படைப் பயிற்சிகள் உண்டு. பள்ளி அளவில், கல்லூரி அளவில் என்சிசி பயிற்சியில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு முகாம்களில் கலந்து கொள்ள வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வட்டார அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்சிசி முகாம்கள் நடைபெறுவதால் மாணவ மாணவிகள் பங்கேற்று நண்பர்களுடன் தங்கியிருந்து முகாமில் பயிற்சி பெறுவது புதுப்புது அனுபவங்களைத் தரும்.

முகாம் கால வாழ்க்கையானது கூடி வாழும் மனப்பான்மை, ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் பாங்கு, சவால்களை எதிர்கொள்ளும் திறன், சமூகத்தைப் புரிந்துகொள்ளுதல் , மாவட்ட, பிற மாநில, அயல்நாடு மாணவர்களோடு பழகும் தன்மை போன்ற நற்பண்புகளை கற்றுக்கொள்ளும் பாசறையாகத் திகழும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண்டுதோறும் குடியரசுப் தின அணிவகுப்பிற்கான முகாம் மிகவும் சிறப்பிற்குரியதாகும்.

அணி வகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் திறமை ஆகியவற்றைக் கொண்டு தேர்வு செய்யப்படும் என்சிசி வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு சார்பாக டெல்லியில் நடைபெறும் அணி வகுப்பில் கலந்துகொள்வார்கள். இதில் தேர்வாகி கலந்துகொள்வதே என்சிசி வீரர்களின் லட்சியமாகவும், கனவாகவும் இருக்கும். இதைத் தவிர என்சிசி மாணவர்களுக்கு ஆளுமைப் பண்பை வளர்த்திட தலைமைப் பண்பு முகாம், தனித் திறன்களை வளர்த்திட துப்பாக்கிச் சுடுதல் முகாம், தேசிய ஒற்றுமையை மேம்படுத்த தேசிய ஒருமைப்பாடு முகாம் போன்ற பல்வேறு முகாம்கள் ஆண்டுதோறும் நடைபெறும்.

இளைஞர் பரிமாற்ற நிரல் (Youth Exchange Programme), தலைமைப் பண்பிற்கான முகாம்கள் (Leadership Camp), வான்படை முகாம் (Vayu Sainic Camp), கடற்படை முகாம் (Nau Sainik Camp), மலையேற்ற முகாம்கள் (Mountaineering Camp), தேசிய ஒற்றுமைக்கான முகாம்கள் (National Integration Camp), படை ஒருங்கிணைவு முகாம் (Army Attachment Camp), கடற்படை ஒருங்கிணைவு முகாம் (Naval Attachment Camp), வான்படை ஒருங்கிணைவு முகாம் (Airforce Attachment Camp), குடியரசு நாளுக்கான முகாம் (Republic Day Camp), வருடாந்திரப் பயிற்சி முகாம் (Annual Training Camp), கூட்டு வருடாந்திரப் பயிற்சி முகாம் (Combained Annual Training Camp) எனப் பல்வேறு முகாம்கள் ஆண்டுதோறும் நடைபெறும்.

உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்காகச் செல்லும் வாய்ப்பினையும் வழங்கிவருகிறது என்சிசி அமைப்பு. ‘‘என் சி சி மாணவர்கள் பரிமாற்ற திட்டம்” அடிப்படையில் உலகில் பல நாடுகளுக்கு பயிற்சி முகாமுக்கு இந்திய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். மாணவர்கள் பிற நாட்டின் ராணுவக் கட்டமைப்பை, செயல்படும் பாங்கை, கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொள்ள இத்தகைய முகாம்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

முகாம்களில் பங்கேற்பதும் அதில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைப் பெறுவதும், சான்றிதழ்கள் பெறுவதும், எதிர்கால வேலைவாய்ப்புக்கு, உயர்கல்வி படிப்பதற்கு உறுதுணையாக இருக்கும். என்சிசி-யில் பெறப்படும் பி-சான்றிதழ்கள், சி-சான்றிதழ்களினால் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறமுடியும்.

பாதுகாப்புச் சேவைகள், காவல்துறை, துணை ராணுவம், தீயணைப்புத்துறை, எல்லைப் பாதுகாப்பு படை, டெரிடோரியல் ஆர்மி, தொழில்துறை பாதுகாப்புப் படை, பொதுத்துறை மற்றும் அனைத்துச் சீருடை பணிகளிலும் பி மற்றும் சி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

உயர்கல்வி வாய்ப்புகளில் 60 இன்ஜினியரிங் இடங்கள், 16 மருத்துவ இடங்கள், முதுநிலைப் படிப்புகளில் 6 முதல் 7 சதவீத இடங்கள் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களில் என்சிசி கேடட்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சி-சான்றிதழ் பெற்றவர்கள் யுபிஎஸ்சி(UPSC) மற்றும் எஸ்எஸ்சி (SSC)மூலம் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு எழுத்துத் தேர்வுகளில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. ராணுவ சிப்பாய் ஆள்சேர்ப்பின்போது என்சிசி கேடட்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் தரப்படுகிறது.

சகாரா இந்தியா மற்றும் பல சிறந்த தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் என்சிசி சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. என்சிசி மாணவர்களுக்கு (ஸ்காலர்ஷிப்) கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில், கல்லூரிகளில் மேற்படிப்பு பயில இந்த கல்வி உதவித் தொகை உதவிகரமாக இருக்கும்.

என்சிசி கேடட்களின் மதிப்பெண்,தகுதி, திறமை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை முறையே ரூ.6000 மற்றும் ரூ.12000 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளில் சேர்வதற்கு 66 பேருக்கு தலா முப்பதாயிரம் வழங்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi