நாங்குநேரி அருகே கிராம கோயில் உண்டியலில் அமெரிக்க டாலர்கள்: காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்


களக்காடு: நாங்குநேரி அருகே பெரும்படையார் சாஸ்தா கோயில் உண்டியலில் அமெரிக்க டாலர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டாலர்களை வங்கியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள ராஜாக்கள்மங்களம் கிராமத்தில் பெரும்படையார் சாஸ்தா கோயில் மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயில் வளாகத்தில் 3 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் உள்ள இந்த உண்டியல்களுக்கு அலாரம் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வருகைக்கு ஏற்ப ஒரு ஆண்டில் உண்டியல் இரண்டு அல்லது மூன்று முறை திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டு, பணம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் நாங்குநேரி வட்டார ஆய்வாளர் லதா மேற்பார்வையில் கோயில் நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் ஊழியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, அதிலிருந்த பணம் எடுக்கப்பட்டது. அப்போது உண்டியலில் அமெரிக்க டாலரும் கண்டெடுக்கப்பட்டது. 10 டாலர்கள் மதிப்பிலான 2 தாள்கள், 5 டாலர் மதிப்பிலான ஒரு தாளும், ஒரு டாலர் மதிப்பிலான 21 டாலர்களும் ஆக மொத்தம் 46 அமெரிக்க டாலர்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.3,863 ஆகும்.

இந்நிலையில் கோயில் உண்டியலில் டாலர்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையொட்டி உள்ள இக்கோயிலுக்கு நெல்லை, கன்னியாகுமரி உட்பட தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வந்த ஒரு பக்தர் டாலர்களை காணிக்கையாக செலுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த டாலர்களை வங்கியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். உண்டியலில்
ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 408 வசூல் ஆகியுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு