நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி நிலையம்: நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகர மன்ற கூட்டம் நகராட்சி வளகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், நகராட்சி கமிஷனர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்தபோது கட்டப்பட்ட பழமை வாய்ந்த மீன் அங்காடியை அகற்றிவிட்டு புதிதாக ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி நிலையம் கட்டவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செழிப்பு மர விற்பனையை தொடங்கி வைக்கவும், நகராட்சி முழுவதிலும் குடிநீர் பராமரிப்பு பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணி,

சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யவும் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் ரவி, ஸ்ரீமதிராஜி, சசிகலாசெந்தில், சதீஷ்குமார், திவ்யாசந்தோஷ்குமார், ஸ்ரீமதிடில்லி, நாகேஸ்வரன், கண்ணன், தேவிதனசேகரன் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

பின்னர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செழிப்பு இயற்கை உர விற்பனையை நகர மன்ற தலைவர் கார்த்திக்தண்டபாணி தனது சொந்த செலவில் பணம் கொடுத்து உரத்தை வாங்கி தொடங்கி வைத்தார். இதேபோல், அனைத்து வார்டு கவுன்சிலர்களும் பணம் கொடுத்து உரத்தை வாங்கி சென்றனர்.

Related posts

இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதிரடி

மதுரை ரயில் நிலையம் 10 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் இரவில் மதுபான கூடமாக மாறும் அரசுப்பள்ளி வளாகம்