நம்மாழ்வாரும் நாடி நாடி நரசிங்கனும்…

நம்மாழ்வார் என்கிற பெயரிலேயே ஒரு சூட்சுமம் இருக்கிறது. நம்மாழ்வாருடைய பெயர் சடகோபன். சடகோபன் என்கிற பெயர் ஏனென்று பார்ப்போமா! ஒவ்வொரு தாயினுடைய கர்ப்பத்திலிருந்தும், குழந்தை வெளியே வரும்போது, இனி பிறவி எடுக்கக் கூடாது என்று நினைத்தே உள்ளே தவம்போல் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், குழந்தையான ஜீவன், வெளியே வரும்போது, இந்த உலகத்திலுள்ள “சடம்’’ என்கிற வாயு, நம்முடைய உச்சந்தலையைத் தொடும்போது, சுபாவமான ஞானத்தை மறந்து, மீண்டும் இந்த சம்சாரச் சுழலில் சிக்கிக்கொள்கிறது என்று சொல்கிற வழக்கம் உண்டு. ஆனால், ஆழ்வார் அவதரிக்கும்போது எல்லா ஜீவன்களும் ஜனிப்பதுபோன்ற பிரக்ருதி ஜனனம் கிடையாது.

ஆழ்வார் நமக்கு இங்கு ஞானத்தையும், பக்தியையும் போதிப் பதற்காகவே அவதாரம் செய்கிறார். அதனாலேயே அவரை, சடவாயு தொடமுடியாது. அவர் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்போதே, சடவாயுவை எட்டி உதைத்து விட்டு வெளியே வந்ததுனாலதான் “சடகோபன்’’ என்கிற பெயர் வந்தது. “சடாரி’’… “அரி’’ என்றால் எதிரி என்று அர்த்தம்.

சடவாயுவிற்கு யார் எதிரியோ அவர் சடாரி. இதை “ஜடம்’’ என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது வேறு. ஜடம் என்றால் உயிரற்ற பொருள். அசேதனப் பொருள். ஆனால், இங்கு சடாரி.
சடம் என்கிற வாயுவானது, நம்முடைய பூர்வ ஜென்ம ஞாபகங்கள் ஆகட்டும்; கர்ப்பத்தில் அந்த ஜீவனுக்கு ஏற்பட்ட அறிவையும், பூர்வ ஜென்ம ஞாபகங்களையும் மறக்கச் செய்துவிடுகிறது. இந்த விஷயம் கர்ப்போ உபநிஷத்தில் உள்ளது. மேலும், ராமருக்கு சிவபெருமான் உபதேசம் செய்த சிவகீதையிலும், இந்த கர்ப்பவாசத்தில் ஜீவன் எப்படியிருக்கிறது என்பதுபோன்ற வியாக்கியானங்கள் இருக்கின்றன.

அதில் சொல்லப்பட்டிருப்பது யாதெனில், ஒவ்வொரு ஜீவனும் ஒரு தபஸில்தான் இருக்கிறது. இந்தப் பிறவிக்கு மேல் இன்னொரு பிறவி எடுக்கக்கூடாது என்கிற வைராக்கியத்தோடுதான் வருகின்றது. ஆனால், இந்த சடவாயுவானது தொடும்போது தானாக பிராரப்தகர்மா வேலை செய்து, கர்மவினையும் தொடர்கின்றது. சொல்லவே வேண்டாம். மீண்டும் சம்சாரம் என்கிற இந்தச் சுழலில் சிக்கிக் கொள்கிறது.

அப்போது, சடவாயுவை எட்டி உதைத்துவிட்டு ஆழ்வார் வெளியே வருகிறார் என்றால், அங்கே ஆழ்வாருக்கு எந்த கர்மவினைக்கான பிராரப்தமும் இல்லை என்று அர்த்தம். நம்மைப் போல் வினையினால் பிறப்பு எடுக்கவில்லை. சடவாயுவின் மீது கோபப்பட்டதால, சடகோபராக இருக்கிறார். சடகோபர், சடாரி என்பவை அவருடைய பெருமைகள்தான். ஆனால், இங்கு நமக்கென்ன என்று பார்த்தால், அந்தச் சடாரியான அந்தத் திருவடியை நாம் பிடிக்கும்போது, ஏனெனில், அது சடவாயுவை உதைத்த திருவடி இல்லையா… அதனால், அந்தத் திருவடியை நாம் பற்றும்போது, இந்தச் சடவாயுவினுடைய பிடியிலிருந்து நாம் விடுபடுகிறோம்.

நம்மை சடவாயுவினுடைய பிடியிலிருந்து விடுபடச் செய்வதற்குத்தான், ஆழ்வாருடைய அவதாரமே நடக்கின்றது. சடவாயுவின் மயக்கத்திலிருந்து, இந்த ஜீவன் விடுபட வேண்டியே இந்த அவதாரம். எனவேதான், ஆழ்வார் பெருமாளின் திருவடியாக இருப்பதால்தான், அதாவது சடாரியாக இருப்பதால்தான் கோயில்களில் தம் தலையில் சாற்றுகின்றனர். சடாரி என்பது ஆழ்வாருடைய நாமம். பெருமாளின் திருவடிகள் யாரெனில் ஆழ்வாரான நம்மாழ்வார். அப்படிப்பட்ட சடாரியை நம் தலையின்மீது வைப்பதற்கான காரணம் என்ன?

நம் உச்சந்தலையில் அந்த சடவாயுவின் சம்மந்தம் ஏற்பட்டதால்தான். நாம் இதையெல்லாம் மறந்து சம்சாரச் சுழலில் சிக்கியிருக்கிறோம். அப்படி இந்த சம்சார சுழலிலிருந்து விடுபடுவதற்கு யார் நமக்கு உதவி புரிகிறார் எனில், சடாரியை நம்முடைய தலையில் வைத்து பெருமானுடைய திருவடியாக இருக்கக்கூடிய நம்மாழ்வாரை நாம் தாங்கும்போது, அந்த சடவாயுவினுடைய மயக்கத்திலிருந்து நாம் விடுபடுவோம். இது அவருடைய சடகோப நாமத்திற்குரிய விளக்கம்.

ஆனால், அவருக்கு பிரசித்தமாக இருக்ககூடிய பெயர் என்பது “நம்மாழ்வார்’’ ஆகும். அவருக்கு மாறன், சடகோபன், சடாரி, வகுளாபரணன், பராங்குச நாயகி என்று நாயகி பாவத்தில் அழைக்கப்படுகிறார். இத்தனை பெயர் இருந்தாலும், நம்மாழ்வார் என்கிற பெயர்தான் பிரசித்திபெற்றதாக இருக்கிறது.

ஏன் பிரசித்தி பெற்றது?

நம்மாழ்வார் என்கிற பெயர், யார் அளித்தது எனில், பெருமாளே கொடுக்கிறார். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு, “நம்பெருமாள்’’ என்கிற பெயர் வருவதற்கு முன்னரே, பெருமாளே இவரை நம்மாழ்வார் என்று குறிப்பிடுகிறார். நாமும் ஆழ்வாரை நம்மாழ்வார் என்றுதானே குறிப்பிடுகின்றோம்! பெருமாள் இருக்கிறார். நாமும் இருக்கிறோம். பெருமாள் ஆழ்வாரைப் பார்த்து நம்மாழ்வார் என்று குறிப்பிடுகிறார். நாமும் நம்மாழ்வாரைப் பார்த்து நம்மாழ்வார் என்று குறிப்பிடுகின்றோம். பொதுவாக, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஜீவாத்மாவை சேஷனாகவும், பரமாத்மாவை சேஷியாகவும் சொல்வதுதானே சம்பிரதாயம். சேஷ, சேஷித்துவ பாவம்தான் (bhavam). அவன் உடையவன். நாம் உடைமை. இப்போது இந்த உடையவனையும், உடைமையையும் சேர்த்து வைக்கக் கூடிய ஒன்று வேண்டுமல்லவா!

அந்த உடையவனையும், உடைமையையும் சேர்த்து வைக்கக் கூடிய பொருள் வந்து, உடையவனுக்கு உரிய பொருளாக இருக்கணும். உடைமைக்கும் உரிய பொருளாக இருக்கணும். சேஷனுக்கும் சேஷிக்கும் அதாவது உடையவனுக்கும் உடைமைக்கும் பொதுவாக இருக்கக் கூடிய பொருள்தான், இந்த உடைமையை கொண்டுபோய் உடையவனிடம் சேர்க்கமுடியும். இப்போ நாம் சேஷர்களாக இருக்கிறோம். பெருமாள் சேஷியாக இருக்கிறான். இந்த இரண்டையும் சேர்த்து வைக்கக் கூடிய இடத்தில் யார் இருக்கிறார் எனில், ஆழ்வார் இருக்கிறார். அதனால்தான் உடையவனாக இருக்கக் கூடிய பெருமாளும், உரிமையோடு ஆழ்வாரைப் பார்த்து, இவர் நம்மாழ்வார் என்று குறிப்பிடுகிறார். உடைமையாக இருக்கக் கூடிய சேஷியாக இருக்கக்கூடிய நாமும், உரிமையோடு நம்மாழ்வார் என்று சொல்கிறோம்.

அவரும் நம்மாழ்வார் என்று உரிமையோடு சொல்கிறார். நாமும் உரிமையோடு சொல்கிறோம். அப்படிப் பார்க்கும்போது, பகவான் சொல்வதற்கும், நாம் சொல்வதற்கும் என்ன வித்தியாசமென்று பார்த்தால், பகவான் நம்மாழ்வார் என்று சொல்வதற்குக் காரணம் தன்னுடைய உடைமையாக இருக்கக் கூடிய ஆழ்வாரை நமக்காக பூலோகத்திற்கு நம்மையெல்லாம் கரை சேர்ப்பதற்காக அனுப்பி வைக்கிறார்.

நாம் நம்மாழ்வார் என்று சொல்வதற்கு காரணம் என்னவெனில், நம்முடைய ஆழ்வார் என்று நாம் சொல்லும்போது, பெருமாள் அந்த நாமத்தை கொடுத்திருந்தாலும், நாம் ஒவ்வொரு முறையும் நம்மாழ்வார்… நம்மாழ்வார்… என்று உச்சரிக்கும்போதும், என்ன ஆகிறதெனில்… நம்முடைய என்கிற “மமாகாரம்’’ இருக்கிறதல்லவா… நம்முடைய என்ற இந்த மமாகாரமும், அந்த மமாகாரத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அகங்காரமும், நம்மைவிட்டு நீங்குகிறது. எப்போது நீங்குகிறதெனில், நம்மாழ்வார்… நம்மாழ்வார்… என்று நாம் சொல்லச் சொல்ல நீங்குகிறது.

அப்போது, “நம்’’ என்று உரிமையோடு “ஆழ்வாரை’’ நம்மாழ்வார் என்று சொல்லும்போது, நம்முடைய இந்த மமாகாரம் என்கிற பற்று எங்கு போய்விடுகிறதெனில், ஆழ்வாரை பற்றிக் கொள்கிறது. ஆழ்வாரை பற்றிக்கொள்ளும்போது, மற்ற உலகியல் விஷயங்களில் இருந்து இந்த மமாகாரம் விடுபட்டு, ஆழ்வாரையே முழுமையாக பற்றிக் கொள்கிறது. அப்படி ஆழ்வாரைப் பற்றும்போது, என்ன ஆகிறதெனில், அவர் ஆழ்வாராக இருப்பதினால், நம்மை ஞானம், பக்தி போன்றவற்றில் ஆழ்த்தி நம்முடைய அகங்காரத்திலிருந்து விடுபட வைக்கிறார்.

அப்போது பகவான் சொல்லும்போது, அதன் அர்த்தம் வேறு. நாம் சொல்லும்போது அதன் அர்த்தம் வேறு. அப்போது இந்தத் திருநாமம், அது பகவானிடமிருந்து வெளிப்பட்ட நாமமாக இருப்பதால், அந்தத் திருநாமமே நமக்கு எவ்வளவு பெரிய உண்மையை காண்பித்துக் கொடுக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எத்தனையோ பேர்கள் இருந்தாலும், நம்மாழ்வார்… நம்மாழ்வார்… என்று சொல்லும்போது, நம்முடைய மமாகாரம் அகங்காரம் நம்மைவிட்டு விலகுகின்றது. அப்படி விலகும்போது, நம்முடைய சொத்சொரூபம் நமக்கு தெரிகிறது.

நம்முடைய சொத்சொரூபம் என்ன?

நாம் பகவானுடைய உடைமை. நாம் சேஷம் என்கிற சொத்சொரூபம் நமக்குத் தெரியும். அந்த சேஷன் என்கிற சொத்சொரூபம் தெரிந்தவுடனேயே இந்த சேஷனைக் கொண்டுபோய் சேஷியிடம் சேர்த்து வைக்கக் கூடிய பொறுப்பும் யாரிடம் இருக்கிறதெனில், ஆழ்வாரிடம்தான் இருக்கிறது. இந்த உடைமையை உடையவனோடு சேர்த்து வைக்கக் கூடிய பொறுப்பு ஒருவருக்கு இருக்கிறதென்றால், அவர் உடையவனுக்கும் உடையவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டு மென்று பார்த்தோம். இந்த இரண்டிற்கும் பொதுவான ஒரு ஸ்தானம் உண்டு. அதுதான் தாய் என்கிற ஸ்தானம். அம்மா என்கிற ஸ்தானமானது அப்பாவிற்கு உரியவள். அதேநேரத்தில் குழந்தைக்கும் உரியவள். இங்கு தந்தை என்பது பகவான் – சேஷி.

குழந்தை என்பது ஜீவாத்மா சேஷன். இங்கு இருவரையும் சேர்த்து வைக்கக் கூடிய செயலை தாய்தான் செய்ய முடியும். இங்கு ஆழ்வார் நமக்கு தாயார் ஸ்தானத்திலிருந்து இந்தக் குழந்தை என்கிற ஜீவாத்மாவை கொண்டுபோய் தந்தையாக இருக்கக் கூடிய பரமாத்மாவோடு சேர்த்து வைக்கிறார். ஏனெனில், இந்த இரண்டுக்கும் இவர்தான் பொதுநிலையில் இருக்கிறார். இங்கு ஆழ்வார் என்கிற தாயாரிடம் சரணடையும்போது, அந்த சடாவாயுவின் தாக்கத்தை நீக்குகிறார். சாதாரண தாய், கர்ப்பத்தில் இருந்தபோது சடவாயு தாக்கியது. ஆழ்வார் என்கிற தாயாரை சரணடையும்போது சடவாயுவின் தாக்கம் விலகிவிட்டது.

இப்படியாக மமகாரம், அகங்காரம் நீக்கி, பிரகிருதியின் பற்றை அழித்து, தாயார் நிலையிலிருந்து பகவானிடம் சேர்க்கும் ஒரு ஸ்தானம் யாருடையது என்று கேட்டால், அது நம்மாழ்வாருடையதுதான். எனவே, நாம் ஆழ்வாரை தாயார் ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறோம். இப்போது ஆழ்வார் ஒரு பாசுரம் சாதிக்கிறார்.

“ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே’’.

இந்தப் பாசுரமே ஆழ்வார், தாயார் ஸ்தானத்தில் நின்று பாடிய பாசுரம்தான். எனவே, இந்தப் பாசுரத்திற்கே தாய்ப் பாசுரம் என்றுதான் பெயர். ஏனெனில், ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் வாடி வாடும் வாள் நுதலே… என்று தன்னுடைய மகளை ஒரு தாய் சொல்வதுபோல இந்தப் பாசுரத்தில் குறிப்பிடுகிறார். இப்போது வாடி வாடும் வாள் நுதலே… என்று யாரைச் சொல்கிறார்… ஞானபக்தி வைராக்கியம் யாருக்கு சித்தித்துவிட்டதோ, அந்த ஜீவாத்மாவை இங்கு மகளாக வைத்துக் கொண்டு, தாய் ஸ்தானத்தில் ஆழ்வாரே நின்று பாசுரத்தை பாடுகிறார்.

ஆடி ஆடி அகம் கரைந்து… என்று சொல்கிறார் அல்லவா… இந்த ஆடி ஆடி அகம் கரைந்து என்று சொல்லும்போது, இந்தப் பெருமாளுடைய கல்யாண குணங்களை உணர்ந்து கொண்ட ஒரு ஜீவாத்மா இருக்கிறதல்லவா… சொத்சொரூபத்தை உணர்ந்து கொண்ட ஜீவாத்மா… சொத்சொரூபம் என்பது இங்கே என்னவெனில், தன்னை பெருமாளுடைய உடைமையாக சேஷத்துவ பாவத்தை உணர்ந்து கொண்ட ஜீவாத்மா.

ஆச்சார்ய அனுக்கிரகத்தால், ஞான, பக்தி, வைராக்கியம் சித்தித்த ஒரு ஜீவாத்மா… அந்த ஜீவாத்மா என்ன செய்கிறதெனில், தன்னுடைய உடல், மொழி, மனம், மெய் மூன்றாலும் பகவானிடம் சரணாகதி ஆகியிருக்கிறது. அப்படிச் சரணாகதி ஆனதினுடைய வெளிப்பாடு எப்படியெனில்… உடலால் பகவானுக்கு சரணாகதி ஆகியிருப்பதின் வெளிப்பாடு எப்படியெனில் ஆடி ஆடி… இது உடலால் சரணாகதியின் வெளிப்பாடு என்பதே ஆடி ஆடி என்கிற பதம். அகம் கரைந்து என்று சொல்லும்போது மனதால் அந்த ஜீவாத்மா பரமாத்மாவிற்கு சரணாகதி ஆகியிருக்கிறது என்பதை குறிக்கிறது.

(அடுத்த இதழில்….)

ஸ்ரீதத்தாத்ரேய சுவாமிகள்

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை