நம்மாழ்வாரின் பாதையில் பயணிப்பதே பெருமை! : நெகிழ்கிறார் மதுரை உழவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (எ) கருணாகரன். தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டு வருகிறார். வயலில் விளையும் நெல்லை அரிசியாக மாற்றி அவரே நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து வருகிறார். நோயில்லாத தலைமுறையை உருவாக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்புதான் இந்தப் பாரம்பரிய நெல் சாகுபடியில் என்னை ஈடுபட வைக்கிறது என்ற தீர்க்கமான பார்வையோடு, விவசாயப் பணியில் ஈடுபட்டு வரும் கருணாகரனை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் தான் எனது கிராமம். சிறுவயதில் இருந்தே எங்களுக்குத் தொழில் என்றால் அது விவசாயம் மட்டும்தான் என பேசத் தொடங்குகிறார் விவசாயி கருணாகரன்.“எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் மற்றவர்களைப்போல குறுகிய காலத்தில் நிறைய மகசூல் தரும் என்று கண்ட கண்ட நெல் பயிர்களை சாகுபடி செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதனால் பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்து வைத்து, அந்த விதைகளையே எனது வயலில் பயிர் செய்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் நெல் மற்றும் அரிசியை மற்றவர்களுக்குத் தருகிறேன். அப்படிக் கொடுப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சியே என்றவர் மேலும் தொடர்ந்தார்.

அனைவரும் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு உணவு என்ற ஒரு விஷயத்தை இயற்கை சார்ந்ததாக மாற்ற வேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் வியாதி என்பது உணவு மூலமாகத்தான் பரவுகிறது. ஆகவே உணவை முழுக்க முழுக்க இயற்கை உணவாகக் கொடுத்தால் வியாதியில் இருந்து தப்பிக்கலாம் என்ற நோக்கோடு இந்த இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்திருக்கிறேன்.நம்மாழ்வாரின் விவசாயப் பாதைதான் எனக்கும். இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க வேண்டும். அதனால் நம்மாழ்வார் விட்டுச்சென்ற பணிகளை நம்மால் முடிந்த மட்டும் தொடர வேண்டும் என நினைத்து செயல்பட்டு வருகிறேன். எனக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் கருப்புக் கவுனி, கருங்குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தங்கச்சம்பா, காலாபாத், வைகை குண்டான், செம்புலி சான் சம்பா, தில்லைநாயகம், மைசூர்

மல்லி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை நடவு செய்திருக்கிறேன். இங்கு விளைகிற பலதரப்பட்ட நெல் ரகங்களை அரிசியாக மாற்றி நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறேன். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை அதனை விதைப்பது மட்டுமல்ல. விற்பனை செய்வதுமே சவாலான காரியம். சந்தைப்படுத்துதலில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து ஏன் இந்த நெல் வகைகளைச் சாகுபடி செய்கிறோம் என்ற எண்ணம்தான் ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் உடம்பிற்கு தீங்கு விளைவிக்காத பழங்கால அரிசி வகைகளைச் சாப்பிடும்போது உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை மக்களிடம் கூறும்பொழுது மக்களும் அதை ஏற்றுக் கொண்டு வாங்கி மகிழ்ந்தனர். ஒரு விவசாயி 30 சென்ட் மட்டும் வைத்திருந்தாலே போதும். அவர் நெல், காய்கறி போன்ற பயிர்களை இயற்கை முறையில் விளைவித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதையாவது உறுதி செய்யலாம். என்னிடம் வெறும் இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. இதில் பாரம்பரிய நெல் வகைகளை மட்டுமே விளைவித்து எனது குடும்பத்திற்கு வைத்துக்கொண்டது போக மற்றவர்களுக்கும் விற்று லாபம் ஈட்டி வருகிறேன். அதுபோக, இயற்கை விவசாயத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்வதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.

விவசாயிகள் எந்த இடத்திற்கு கூப்பிட்டாலும் அங்கேயே சென்று அவர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை உடன் இருந்து சொல்லித்தருகிறேன். மேலும் இயற்கை உரங்கள் சார்ந்தும் பயிற்சி கொடுத்து வருகிறேன். வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் இதுபோன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன். தற்போதைய சூழலில் 60 நாட்களிலே அறுவடைக்கு வருகிற நெல் ரகங்கள் இருக்கின்றன. இதற்கிடையில் 120 நாட்கள், 150 நாட்கள் என அதிக நாட்கள் எடுத்து விளையும் இயற்கை விவசாயத்தை ஏன் செய்து வருகிறாய்? என எனது வீடுகளிலும் கூட கேட்பதுண்டு. இதனால், என்னை பிழைக்கத் தெரியாதவன் என்றும் கேலி செய்வார்கள். ஆனால் நான் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட்டது கிடையாது. என்னைத் தூற்றிய என் வீட்டு ஆட்களே இந்த உணவைச் சாப்பிட்ட பின்பு, இதன் அருமையை உணர்ந்து கொண்டார்கள். எந்த வித பக்க விளைவும் இல்லாமல் இருப்பதால் இந்த உணவுதான் வேண்டும் என கேட்கிறார்கள். அதேபோன்று எனது வாடிக்கையாளர்களும் இந்த அரிசிதான் வேண்டும், இந்த இயற்கை உணவு வகைதான் வேண்டும் என கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்’’ மகிழ்ச்சி பொங்க பேசி முடித்தார் கருணாகரன்.
தொடர்புக்கு:
கருணாகரன்:
99438 99128.

Related posts

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்; உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை: இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை