நகங்களின் அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் முக்கியம்தான்!

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எதிரில் இருப்பவர்கள் கொஞ்சம் அருவருப்பாக தான் பார்ப்பார்கள் ஏனென்றால் நகம் கடித்துவிட்டு அந்த எச்சில் கையோடு பொருட்களை எடுப்பார்கள். இப்படி பல பிரச்னைகள் உண்டு நகம் கடிப்பதில். மேலும் இந்த நகம் கடிப்பதில் ஆண்களை விட பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக சொல்கிறது மங்களூர் தேசிய ஆரோக்கிய மையம். நகம் கடிப்பதே நமக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்னையின் மூலமாகத்தான் நிகழ்கிறது எனில் நகம் கடிப்பதே பெரிய பிரச்னைகளைக் கொண்டு வரும் என்பதுதான் இன்னும் சோகம்.பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் உடலில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதனால் தான் முன்னோர் நகம் கடித்தால் வீட்டிற்கு நல்லது இல்லையென்றுக் கூறுவார்கள். இது நோய் கிருமிகளை உடலினுள் கொண்டு செல்ல இலகுவான வழியாகும்.

நகம் கடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:

நகங்களை தொடர்ந்து கடிப்பதால் நகத்தினுள் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலினுள் செல்வதுடன், தொற்று பாதிப்பும் ஏற்படுகின்றது. விரல்களில் வீக்கம் ஏற்பட்டு, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறும். பார்ப்பதற்கும் விரலினுள் சீழ் படிவது போல் காணப்படும்.நகம் கடிப்பதால் பல் ஈறுகளில் காயம், முன்புற சொத்தை மற்றும் பல் கூச்சம் போன்ற வாய்வழி பிரச்னைகள் வரக் கூடும். நீண்ட நாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்தி வேறு பொருட்களை கூட கடிக்க முடியாத நிலை ஏற்பட கூடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிற்று வலி மற்றும் ஜீரண தொடர்பான பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.

நீங்கள் நகம் கடிப்பவரா?

நீங்கள் நகம் கடிப்பவர் எனில் முதலில் உங்களின் மனநிலை , சிந்தனை குறித்த ஆரோக்கியமும் இங்கே பிரச்னைக்குள்ளாகியிருக்கின்றன என அர்த்தம். நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு உட்படுவார்கள். பெற்றோர், நண்பர்களிடம் மதிப்புக் குறையும். மேலும் நம்மிடம் ஏதேனும் உணவுப் பொருட்களைக் கேட்டுப் பெறவே சுற்றி இருப்பவர்கள் தயக்கம் காட்டுவார்கள். மேலும் நகம் கடிக்கும் பழக்கம் நகத்தை முழுமையாக கடித்து எரிந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தை மட்டுமே அதிகப்படுத்தி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை தடைபடுத்தும்.

கட்டுபடுத்தும் வழிமுறைகள்

மருந்துக்கடையில் கிடைக்கக்கூடிய கசப்புத் தன்மையுள்ள மருந்து, எண்ணெய், சாயம் போன்றவற்றில் ஏதாவதொன்றை விரல்களில் பூசிக் கொள்ளுதல். குறிப்பாக குழந்தைகளுக்கு விரல்களை துணிகளால் சுற்றிக் கட்டி விடுதல் அல்லது கையுறை போட்டுவிடுதல். குறிப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கு நகங்களை கடிக்காமல் இருந்தால் குழந்தைக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு பொருளைத் தருவதாக குழந்தைகளுக்கு வாக்குறுதி கொடுத்தல் நகம் கடிக்கும் குழந்தைகளைக் கண்டித்தல் மற்றும் நெயில் பாலீஸ் பயன்படுத்துதல். ஆண்கள் ஒருவேளை நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ள தயங்கினால் வண்ணமில்லாத நீர் போன்ற பாலிஷ்களை பயன்படுத்தலாம். எம்பிராய்டரி, கியூப் கேம் பயிற்சிகள், ஓவியம், புதிர் அட்டைகளை சேர்க்கும் சில விளையாட்டுகள் என கைகள், விரல்களுக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகளை அதிகரிக்கலாம். ஏதேனும் சிந்திக்கத் தோன்றினால் நகங்களைக் கடிக்காமல் மாறாக அதை சீரான வடிவத்துக்கு மாற்றுவது, மேற்புற இறந்த செல்களை நீக்குவது, கியூட்டிகிள்களில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது போன்ற மேனிக்யூர் வேலைகளில் ஈடுபட்டு நகங்களை அழகாக்கும் வழிகளைத் தேர்வு செய்யலாம். மூளை ஏதேனும் ஒரு விஷயம் குறித்து அதிகம் யோசித்துக் கொண்டிருப்பதால்தான் நகம் கடிக்கும் பழக்கம் அதிகரிக்கும். தியானம், யோகா, மூச்சுப் பயிற்சிகள் மேற்கொள்ளா மனமும், உடலும் ஒருநிலை பெறும், மனக்குழப்பங்கள் நீங்கும். ஏதேனும் கதைகள், கவிதைகள், எழுதலாம். காலிகிராபி போன்ற எழுத்துகளை அழகான வடிவங்களில் எழுதும் பயிற்சிகள் பெறலாம். பெரும்பாலும் பயிற்சிகள்தான் நகம் கடிக்கும் பழக்கத்தை குறைக்கும். நகங்களுக்கு இவ்வளது முக்கியத்துவமா எனக் கேட்டால், நம் உடலுக்குள் நோய்க்கிருமிகளை எளிதில் கொண்டு வரும் வழிகளில் மிக முக்கிய வாயில் இந்த நகங்கள்தான் என்பதால் அவற்றில் ஆரோக்கியமும், சுத்தமும் மிக முக்கியம்.

– கவிதாபாலாஜிகணேஷ்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்