நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ஆங்காங்கே நிறுத்தி வைப்பதால் பயணிகள் ரயில் தினமும் தாமதம்: பெண்கள் கடும் அவதி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபும் செல்லும் பயணிகள் ரயில் சரியான நேரத்துக்கு இயக்கப்படாமல் இருப்பதால் பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ்கள், ரயில்கள் மூலம் பயணிக்கிறார்கள். குறிப்பாக ரயில்களில் அதிகம் பேர் பயணம் செய்கிறார்கள். இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இயங்கும் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தினமும் மாலை 6.35 க்கு புறப்பட்டு செல்லும் பயணிகள் ரயிலில் (வண்டி எண் 06428) நாகர்கோவிலில் இருந்து அதிக இளம்பெண்கள் செல்கிறார்கள். இந்த ரயில் நாகர்கோவில் டவுன், ஆளூர், இரணியல், பள்ளியாடி, குழித்துறை, பாறசாலை உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும். இதனால் மேற்கண்ட இடங்களுக்கு செல்பவர்கள் அதிகம் பேர் இந்த ரயிலில் தான் பயணிக்கிறார்கள்.

இந்த ரயில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். ஆனால் இந்த பயணிகள் ரயில் முறையாக இயக்கப்படுவதில்லை. சில சமயங்களில் நாகர்கோவிலில் இருந்தே இரவு 7 மணிக்கு தான் புறப்படும். இது தவிர திருவனந்தபுரத்தில் இருந்து மாலையில் சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வரும் இரு பயணிகள் ரயில் மற்றும் பரசுராம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்காக தினமும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த பயணிகள் ரயிலை பல மணி நேரம் பாதியில் நிறுத்தி விடுகிறார்கள்.

நேற்றுமுன் தினம் மாலை 6.40க்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த ரயில் வழக்கம் போல், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரயில்கள், சரக்கு ரயிலுக்கு வழி விடுவதற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இரணியலில் மட்டுமே அரை மணி நேரத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக தான் திருவனந்தபுரம் சென்றது. இரவு 8.25க்கு திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரயில் இரவு 9.40 மணிக்கு தான் சென்றது. இதனால் இந்த ரயிலில் திருவனந்தபுரம், பாறசாலை, தனுவச்சபுரம், அமரவிளை, நெய்யாற்றின்கரை, பாலராமபுரம், நேமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள் பாதிப்படைந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து மாலையில் புறப்பட்டு செல்லும் இந்த ரயிலை தாமதம் இல்லாமல் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த ரயில் தொடர்ந்து தாமதம் ஆகி வருவது பயணிகளை வேதனை அடைய செய்துள்ளது.

இது குறித்து இந்த பயணிகள் ரயிலில் செல்லும் இளம்பெண்கள் கூறுகையில்,
நாகர்கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு பிறகு ஒரு பயணிகள் ரயில் தான் திருவனந்தபுரம் செல்கிறது. இந்த ரயிலில் அதிகம் பேர் பயணிக்கிறார்கள். ரயில்வே நிர்வாகத்துக்கு வருமானம் கிடைப்பதிலும் பிரச்சினை இல்லை. இருந்தாலும் இந்த பயணிகள் ரயிலை, முறையாக இயக்காமல், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் அனைத்து ரயில்களுக்கும் வழி விடுவதற்காக இந்த ரயிலை தான் பாதியில் நிறுத்துகிறார்கள். இதனால் இந்த ரயிலில் பயணித்து வீடு போய் சேருவதற்குள் வாழ்க்கை வெறுத்து விடுகிறது. திருவனந்தபுரம் செல்லும் போது சில சமயம் இரவு 10 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. எனவே இந்த ரயிலை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

போராட்ட எச்சரிக்கை
இளம்பெண்கள் பலர் வேலை முடிந்து, இந்த ரயிலில் தான் அதிகம் பயணிக்கிறார்கள். ஏற்கனவே ரயில்களில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மகளிர் பெட்டியில் ஆண்கள் ஏறி அமர்ந்து ரகளை செய்வது, இளம்பெண்களை கேலி, கிண்டல் செய்வது, ஆபாசமாக நடந்து கொள்வது தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் அதிக இளம்பெண்கள் பயணிக்கும் பயணிகளை ரயிலை, இரவு வரை இழுத்தடிப்பு செய்வது இளம்பெண்களை கதி கலங்க வைத்துள்ளது.

எனவே ரயில்வே நிர்வாகம் பெண்களின் பாதுகாப்பு கருதி, மாலை வேளையில் புறப்படும் ரயில்களை சரியான நேரத்துக்கு இயக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து இது போன்று ரயிலை தாமதம் செய்தால் பயணிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

1.45 மணிநேரம் பயணம்; 1.30 மணிநேரம் தாமதம்

இந்த பயணிகள் ரயிலில் செல்லும் இளம்பெண்கள் கூறுகையில், நாகர்கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு பிறகு ஒரு பயணிகள் ரயில் தான் திருவனந்தபுரம் செல்கிறது. இந்த ரயிலில் அதிகம் பேர் பயணிக்கிறார்கள். ரயில்வே நிர்வாகத்துக்கு வருமானம் கிடைப்பதிலும் பிரச்சினை இல்லை. இருந்தாலும் இந்த பயணிகள் ரயிலை, முறையாக இயக்காமல், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் அனைத்து ரயில்களுக்கும் வழி விடுவதற்காக இந்த ரயிலை தான் பாதியில் நிறுத்துகிறார்கள்.

இதனால் இந்த ரயிலில் பயணித்து வீடு போய் சேருவதற்குள் வாழ்க்கை வெறுத்து விடுகிறது. திருவனந்தபுரம் செல்லும் போது சில சமயம் இரவு 10 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. 1.45 மணி நேர மரணத்திற்கு சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தாமதம் ஆகிறது. எனவே இந்த ரயிலை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்