நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மக்களிடம் போலீசார் தீவிர சோதனை

நாகர்கோவில் : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களை தீவிர சோதனைக்கு பிறகே குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போலீசார் அனுமதித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் மனுக்களுடன் வருகை தருகின்றனர். இலவச வீட்டுமனை பட்டா, நலத்திட்ட உதவிகள் வழங்க கேட்டு அவர்கள் மனுக்களை அளிக்கின்றனர். சொத்து பிரச்னை தொடர்பாகவும், சிவில், கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பலர் மனுக்களுடன் வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த 10ம் தேதி முதல் கூட்டம் நடத்தப்பட்டது. ஜூன் 17ம் தேதி பக்ரீத் விடுமுறை என்பதால் அன்றைய கூட்டம் நடைபெற வில்லை.

இந்தநிலையில் நேற்று திங்கள்கிழமை காலை முதல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஏராளமானோர் வருகை தந்தனர். அவ்வாறு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைகின்றவர்களிடம் போலீசார் நுழைவு வாயிலிலேயே தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக லூயி பிரைலி கூட்ட அரங்கிலும் பொதுமக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் கலெக்டரிடம் மனு அளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலக பிரதான வாசல் பகுதியில் இதற்காக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு