நாகை அரசு மருத்துவமனை விவகாரம்; வதந்திகளை நம்பி அறிக்கை வெளியிடக்கூடாது: அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி

நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனை விவகாரத்தில் வதந்திகளை நம்பி அறிக்கை வெளியிடக்கூடாது என்று அண்ணாமலைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். நாகப்பட்டினத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரேநாளில் 23 மருத்துவம் சார்ந்த கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கியவுடன் அங்கு இருக்கும் வட்டார மருத்துவமனையை மூடுவதை கொள்கையாக வைத்து இருந்தனர். இதன்படி புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சொந்த மாவட்டத்திலேயே மூடினார். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி வந்தவுடன் அது திறக்கப்பட்டது.

அதுபோல் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை மூடப்படும் என சிலர் சொல்லிய வதந்திகளை நம்பி பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற வதந்திகளை அவர் நம்பாமல் உண்மை நிலையை கண்டறிந்து அறிக்கை வெளியிட வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 9 டாக்டர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய முதலில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு அதன் பின்னர் வேறு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது ஒரத்தூரில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதுமான குடிநீர் வசதி இல்லை. இருப்பினும் அங்கு குடிநீர் மற்றும் சாலை வசதிகள், சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றை செய்து தர முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். பொதுப்பணித்துறை ஆய்வு செய்த பின்னர் தான் கட்டிடங்கள் கட்டப்படும். ஆனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள இடத்தை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தார்களா என்பது தெரியவில்லை. அப்படி ஆய்வு செய்திருந்தால் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான தண்ணீர் வசதி முழுமையாக கிடைத்து இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஒரத்தூரில் அமைத்ததில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது