நாகை, புதுவை மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

நாகப்பட்டினம்: நாகை, புதுச்சேரி மீனவர்களை தாக்கி வலை, மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் சிங்காரவேல் நகரை சேர்ந்த சக்திபாலன்(24), ஹரிகிருஷ்ணன்(20), சூர்யா(17), புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கண்ணன் (20), சிரஞ்சீவி (23) ஆகிய 5 பேர் செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25ம்தேதி இரவு பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கே 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர், பைபர் படகை சுற்றி வளைத்து ஏறி, 5 மீனவர்களை கட்டை மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். அவர்கள் வைத்திருந்த 550கிலோ வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்கள் என ₹4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர். இதில் காயமடைந்த மீனவர்கள் கரை திரும்பி செருதூர் பஞ்சாயத்தார்களிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து 5 மீனவர்களும், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 24ம் தேதி இதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் நாகப்பட்டினம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடற்கொள்ளையர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அன்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை எச்சரித்து விரட்டியதோடு, கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். கடற்படையினர் வீசிய கற்கள், படகுகளுக்குள் விழுந்ததில் மீனவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. கல் வீச்சில் ராமேஸ்வரம் சுடுகாட்டம்பட்டியை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்க்ளின் என்பவருக்கு இடது காலில் சதை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வேறு பகுதிக்கு சென்று மீன் பிடித்த மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி