நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து விசைபடகை பறிமுதல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் தனது விசைப்படகில் சகோதரர் செல்வகுமார்(40), அதே பகுதியை சேர்ந்த ராஜா (42), இவரது சகோதரர்கள் பொண்ணு ராஜா (40), இளையராஜா (36) மற்றும் கணபதி (34), சாய்சிவா (32), முகேஷ் (30), அரவிந்த் (30), அழகு (32), வேலு (32) ஆகிய 10 பேர் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை நாகையிலிருந்து தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவர்களிடம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 பேரையும் கைது செய்தனர். மேலும் விசைப்படகு மற்றும் வலைகள், பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை திருகோணமலைக்கு கொண்டு சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 10 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை உடனடியாக மீட்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* துப்பாக்கி காட்டி மிரட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்றனர். மாலை தனுஷ்கோடியில் இருந்து தெற்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை வழிமறித்து துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர். அப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என ஒலிப்பெருக்கியால் எச்சரித்தனர். மேலும், பாம்பன் மீனவர் இனியன் படகின் அருகே சென்ற கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி இனிமேல் இப்பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்ததுடன் படகில் இருந்த மீன்பிடி வலையை வெட்டி கடலில் வீசினர். இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையினால் அச்சமடைந்த மீனவர்கள், மீன் பிடிப்பதை நிறுத்தி விட்டு வேறு பகுதிக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று பகலில் பாம்பன் வந்து சேர்ந்தனர்.

Related posts

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு விழா

தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு