‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் 85,000 பேருக்கு இதுவரை பணி நியமனம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் முயற்சியால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் 18ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 25,888 மாணவர்கள் மாநில அளவில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர். நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamilnadu Skill development corporation) சார்பில் ஓலா, தனது எலக்ட்ரிக் வாகன ஆலைகளுக்கு பாலிடெக்னிக் மாணவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அதுபோல் அக்சன்சர், அமேசான், அசோக் லேலண்ட், போஷ், கேட்டர் பில்லர் இந்தியா, போர்ட், ஹச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு சேர்த்துள்ளன.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு பல மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதில்லை. இந்த இடைநிற்றலை தடுக்கவும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் முக்கிய இலக்காக கொண்டு தொலைநோக்கு திட்டமாக முதலமைச்சர் இந்த திட்டத்தினை தொடங்கினார். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் எதிர்பார்ப்பையும் தாண்டி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 47 சதவிகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளது. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் எதிர்பார்ப்பையும் தாண்டி 2022-23ம் கல்வியாண்டில் 13.14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு திறன்களில் பயிற்சி அளித்துள்ளது. ஏஐ, இயந்திர கற்றல், கிளவுட் கம்ப்யூட்டிங்க், ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், மின்சார வாகனங்கள், கட்டடத் தகவல் மாடலிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற நவீன காலகட்டத்திற்கு ஏற்ற படிப்புகள் மூலம் மாணவர்களை தயார்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சி வாயிலாக கடந்த ஆண்டில் மட்டும் கலை மற்றும் அறிவியல் பிரிவில் 83 ஆயிரத்து 195 பேரும், பொறியியல் பிரிவில் 64 ஆயிரத்து 954 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 149 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வருடம் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ரிலையன்ஸ் ரீடெய்ஸ், டிசிஎஸ், விப்ரோ, எலூசியன், பெகாட்ரான், பாக்ஸ்கான், அவாசாஃப்ட், பைஜஸ், ஃப்ளோசர்வ் போன்ற நிறுவனங்கள் மூலம் கலை மற்றும் அறிவியல் பிரிவினருக்கும், அமேசான், வால்மார்ட், சோஹோ, அக்சன்சர் போன்ற நிறுவனங்கள் மூலம் பொறியியல் பிரிவினருக்கும் ஒருங்கிணைந்த வளாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை சுமார் 87 ஆயிரத்து 712 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

போட்டித் தேர்வுகள்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு அமைச்சர் உதயநிதியால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி ஆகிய பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரி உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

குடிமை பணிகள் ஊக்கத் தொகை திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு வரவு-செலவுத் திட்டம் 2023-2024ல் ஒரு சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு, தேர்வான அந்த ஆயிரம் மாணவர்கள் அவர்களின் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500ம், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 453 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், 1 கோடியே 13 லட்சத்து 25ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் முதன்மைத் தேர்வுக்கான உதவித்தொகை பயனாளிகளான 453 பேரில் 117 பேர் குடிமைப்பணி நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 39 பேர் 2023-2024ம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அகில இந்திய வனப்பணிக்கான தேர்வில் தேர்வாகியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 8 நபர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உதவிப்பெற்ற பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நான் முதல்வன் குடிமைப் பணிகள் முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகை திட்டம் பயனாளிகள் மட்டுமின்றி பயனாளிகளின் பெற்றோராலும் பாராட்டப்படுகிறது. இந்த ஊக்கத்தொகைத் திட்டமானது, போட்டித்தேர்வாளர்கள் தங்களுக்கு தேவையான பயிற்சி ஏடுகள் மற்றும் வளங்களை சிறந்த முறையில் அணுக உதவுவதன் மூலம் குடிமைப் பணிகள் தேர்வு 2024ல் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தில் கடந்தாண்டு 1,19,487 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். அதேபோல், நடப்பாண்டில் இதுவரை 85,500 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கடந்தாண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு