நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பதிவு எக்ஸ் தளம், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்: திருச்சி எஸ்பி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பதிவு செய்த விவகாரம் தொடர்பாக திருச்சி எஸ்பி தொடர்ந்த வழக்கில் எக்ஸ் தள பொறுப்பாளர், ஒன்றிய அரசுக்கு ஐகோர் கிளை நோட்டீஸ் வழங்கி உள்ளது. திருச்சி எஸ்பி வருண்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்ட எஸ்பியாக கடந்த 11.8.2023 முதல் பணியாற்றுகிறேன். என் மனைவி வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றுகிறார். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை 11ல் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் எஸ்ஐ அருண், கொடுத்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் நான் சாதிரீதியாக பாகுபாடு பார்ப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார். அவரது கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் என்னை இழிவுப்படுத்தி பேட்டி கொடுத்துள்ளனர். என்னை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இதனால், ஆக. 22ல் திருச்சி தில்லை நகர் போலீசில் மீண்டும் புகார் அளித்தேன். இதில், 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணைக்கு பெயர் தெரியாத அந்த நபர்களின் எக்ஸ் தள ஐடி முகவரிக்கள் தேவை.

அப்போதுதான் முறையான விசாரணையை மேற்கொள்ள முடியும். இதற்காக திருச்சி தில்லை நகர் போலீசார் பெங்களூருவில் உள்ள எக்ஸ் தள நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர். ஆனால், அந்த நிறுவனம் போதுமான விபரங்களை தரவில்லை. ஆன்லைன் மூலம் தொல்லை கொடுப்பது, போலி ஐடிகளை உருவாக்கி மற்றவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது போன்றவற்றை தடுக்காவிட்டால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எக்ஸ் தளம் துணைபோகிறது என்று அர்த்தம். எக்ஸ் தளம் ஒத்துழைக்காததால், அந்த பதிவுகள் தற்போது இதர சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்நிறுவனத்தினர் உரிய தகவல்களை தராவிட்டால், எங்களுக்கு சமூகத்தில் உள்ள மரியாதை குறைந்துவிடும்.

தகவல் தொழில்நுட்ப சட்டப்படி, சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவன குறைதீர் அதிகாரி தகவல் கேட்போருக்கு 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். கோரிக்கையை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். குறைதீர் அதிகாரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மற்றும் என் குடும்பத்தினர் மீதான பதிவுகளை நீக்காவிட்டால், எனக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட ஆட்சேபனைக்குரிய பதிவுகளை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். உரிய தகவல்களை தராத அந்த நிறுவனத்தின் மீது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி தில்லை நகர் போலீசார் கேட்ட தகவல்களை தருமாறு எக்ஸ் நிறுவனத்திற்கும், எனது புகாரை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு திருச்சி தில்லை நகர் போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘சமூக வலைத்தளங்களில் இதுபோன்று அவதூறான கருத்துக்களை போலி முகவரி மூலம் பதிவிடுவது அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு இதனை கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ் தள கணக்குகள் துவங்கும்போது ஆதார் விபரங்களை கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் புகார் குறித்து ஒன்றிய அரசு, எக்ஸ் சமூக வலைத்தள பொறுப்பு அலுவலர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 21க்கு தள்ளி வைத்தார். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று அவதூறான கருத்துக்களை போலி முகவரி மூலம் பதிவிடுவது அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு இதனை கட்டுப்படுத்த வேண்டும். எக்ஸ் தள கணக்குகள் துவங்கும்போது ஆதார் விபரங்களை கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு