லே அவுட் அனுமதிக்கு லஞ்சம்: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் கைது

செய்யூர்: லே அவுட் அமைக்க அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஒன்றியத்தில் அடங்கியது சீவாடி ஊராட்சி. இந்த ஊராட்சிமன்ற தவைராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அரங்கநாதன் (45) என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் மக்களின் பணிகளை நிறைவேற்றிக்கொடுக்க பணம் கையூட்டு பெறுவதாக அடிக்கடி புகார்கள் வந்தன. பொதுமக்களும் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்தநிலையில், சென்னை அருகே பெரும்புதூர் பகுதியை சேர்ந்த முகமது பில்லா என்பவர் சீவாடி கிராமத்தில் வீட்டுமனை அமைக்க 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கு பஞ்சாயத்து அங்கீகாரம் பெறுவதற்காக அந்த நபர், ஊராட்சிமன்ற தலைவரை அணுகியுள்ளார்.

அப்போது பஞ்சாயத்து தலைவர், அனுமதி வழங்கவேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு நிலத்தின் உரிமையாளர், பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததுடன் இதுசம்பந்தமாக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த யோசனைபடி நேற்று மாலை முகமது பில்லா, ஊராட்சிமன்ற தலைவரை சந்தித்து முதல்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் சென்று ஊராட்சிமன்ற தலைவரை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். இதன்பிறகு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது