அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்

ஈரோடு: அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு திருநகர் காலனியில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

அருந்ததியர் சமுதாயத்தினர் 6 சதவீதம் என்ற அளவில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் வாழும் அருந்ததியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அருந்ததியர்கள் தெலுங்கு மொழியில் பேசுவதால், அவர்கள் தமிழர்கள் அல்ல. விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள்” என்று பேசினார். அருந்ததியர் சமூகத்தினர் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. அவதூறு பேச்சு தொடர்பாக தலித் அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செப்டம்பர் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல்துறை சம்மன் வழங்கியது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

Related posts

விமான கழிவறையில் சிகரெட் புகைத்த பயணி: அலாரம் ஒலித்ததால் சிக்கினார்

அசாமில் ரூ19 கோடி ஹெராயின் பறிமுதல்

வௌியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம்