நாம் தமிழர் கட்சி தாமதமாக விண்ணப்பித்ததால் பறிபோனது கரும்பு விவசாயி சின்னம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி ஹெச்.எம்.ஜெ.மன்மீத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். எங்களுக்கு தமிழ்நாட்டில் 6.5 சதவீத ஓட்டு சதவீதம் உள்ளது.

மேலும் எங்களுக்கான விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது’’என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பொது சின்னத்தை பொறுத்தமட்டில் கட்சிகள் பெறுவதற்கான காலக்கெடு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இந்த சின்னத்தை முன்னதாகவே இவர்கள் கேட்டதால் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு தாமதமாக வந்தனர். ஆனால் சின்னம் முன்னதாகவே வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் இதனை சட்ட விரோதம் என்று கூறுகிறார்கள்.

மேலும் இந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட ஒன்றும் கிடையாது’’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில், எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த முடியும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எங்களால் அறிவுறுத்தல் வழங்குவது கூட சாத்தியமில்லாத ஒன்றாக தான் இருக்கிறது என்று சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் உத்தரவை எழுத்துப்பூர்வமாக பதிவேற்றம் செய்கிறோம்’’ என தெரிவித்தனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

கட்டிடத்துக்கு அனுமதி வழங்காததால் பழங்குடியின மாணவர்களுக்கு கன்டெய்னரில் பள்ளி: தெலங்கானாவில் புதுமை