மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் தமிழ்நாடு முழுவதும் 4,100 பேர் தேவநாதனுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். மேலும், 2 நாள் விசாரணையின் போது 4 சொகுசு கார்கள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகள் பழமையான தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி நடந்தாக அளித்த புகாரின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளான குணசீலன், மகிமைநாதன், சாலமன் மோகன்தாஸ், சுதிர் ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேவநாதன், மகிமைநாதன், குணசீலன் ஆகிய 3 பேரை கடந்த ஜூலை 14ம் தேதி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தேவநாதன் உட்பட 3 பேரை போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து தேவநாதனுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

மேலும், தேவநாதன் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவியேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் முறைகேடாக வாங்கிக் குவித்த சொத்துகள் குறித்த பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடியில் அவர் வாங்கி குவித்த சொத்துகள், சென்னையில் அவர் வாடகைக்கு விட்டுள்ள கட்டிடங்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தனது மகள் பெயரில் கட்டி வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தேவநாதனின் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளியான மற்றொரு இயக்குநர் சுதிர் சங்கர் (47) என்பவரை போலீசார் கடந்த 12ம் தேதி கைது செய்தனர். பிறகு கைது செய்யப்பட்ட சுதிர் சுங்கர் மற்றும் நிர்வாக இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கடந்த 19ம் தேதி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து தேவநாதன், பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்து வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்கள், 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். பிறகு போலீஸ் விசாரணை முடிந்து தேவநாதன் மற்றும் அவரது கூட்டாளி சுதிர் சுங்கர் உட்பட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 4ம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் வரை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 4,100 பேர் தேவநாதன் மீது புகார் அளித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் தேவநாதன் வலதுகரமாக இயங்கியவரும், பினாமியுமான சாலமன் மோகன்தாஸை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். சாலமோன் மோகன்தாஸ் சிக்கினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு

ஓபிஎஸ் கவலை வைத்திலிங்கம் மீது வழக்கு போடுவதா?