மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் தீவிபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை: மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எரிந்து நாசமானது. விரைந்து செயல்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் பிரபல ஓட்டல் இயங்கி வருகிறது. 3 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் 3வது தளத்தில் ஓட்டலின் அலுவலகம் மற்றும் ஊழியர்கள் தங்கும் அறைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை திடீரென ஓட்டலின் 3வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த ஊழியர்கள் உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி மயிலாப்பூர், அசோக்நகர் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மின் இணைப்பை துண்டித்துவிட்டு, தீயை அணைத்தனர். முன்னதாக, ஓட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்த பொதுமக்களை ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றினர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஓட்டலின் 3வது மாடியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் மயிலாப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு