முத்துப்பேட்டையில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

*பெற்றோர் வேண்டுகோள்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முத்துப்பேட்டை தெற்குகாடு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய கல்வி தரத்துடன் படித்து வரும் இந்த குழந்தைகள் இங்குள்ள 2010-2011ம் அண்டு கட்டப்பட்ட 2 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் தற்போது குழந்தைகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.

குறிப்பாக வகுப்பறை கட்டிடம் ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. மேல் சிலாப் மீது தட்டுக்கள் போடததால் மழைகாலத்தில் மழை நீர் கசிந்து உள்ளே சொட்டும் நிலையில் உள்ளது. வெயில் காலத்தில் அனல் பறக்கும் வகையில் வெப்பம் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் பல்வேறு வகையில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதேபோல வகுப்பறை கட்டிடத்தின் உள்ள இருக்கும் டைல்ஸ் கால்கள் போடப்பட்ட தரை ஆங்காங்கே உள்வாங்கி சேதமடைந்துள்ளன. அதன் மூலம் குழந்தைகள் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.குழந்தைகளின் கால் பாதங்களிலும் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தரை உள்வாங்கிய பகுதியில் விஷ பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துகள் குடியிருந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றது. வெளிப்புறம் நடைபாதையும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன.

இதனால் இந்த பழுதடைந்த கட்டிடத்தை உடனே சீரமைத்து தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் எனவே அரசு துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்து, சீரமைத்து தர வேண்டும். இதேபோல பள்ளியை சுற்றிலும் சுற்றுசுவர் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்