முதுமலை தெப்பக்காடு முகாமில் ‘மசினி’ யானை தாக்கி பாகன் பரிதாப பலி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி மசினியம்மன் கோயில் அருகே, கடந்த 2006ல் தாயை பிரிந்த 8 மாத பெண் குட்டி யானை மயக்க நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு காப்பாற்றினர். மசினியம்மன் கோயில் அருகே மீட்கப்பட்டதால், குட்டி யானைக்கு மசினி என்று பெயரிடப்பட்டது. கடந்த 2015ல் மசினி யானை திருச்சி சமயபுரம் கோயிலுக்கு அனுப்பப்பட்டது. அங்கு 2018 மே, 25ல் மசினி யானை தாக்கியதில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர். இதைதொடர்ந்து யானையை முதுமலைக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 2019 ஜனவரி மாதம் மசினி யானை மீண்டும் முதுமலை கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் ஒரு பாகனை அந்த யானை தாக்கி கொன்றுள்ளது. நேற்று காலை வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்பட்டபின் அழைத்து செல்லும் போது, 16 வயதான அந்த மசினி யானை திடீரென பாகன் பாலனை (54) தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பாகன் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Related posts

இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை