காளான் வளர்ப்பில் சாதிக்கும் சகோதரர்கள்!

நெல்லை மாவட்டம் களக்காடு சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்தபாலகணேஷ்-க்கு 24 வயது. அவரது தம்பி கலைச்செல்வனுக்கு 22 வயது. இந்த வயது கொண்ட இன்றைய இளவட்டங்களின் பெரும்பாலானோர் இன்ஸ்டா, ரீல்ஸ் என ஆன்லைனில் மூழ்கி கிடக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இந்த இரு சகோதரர்களும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 லட்சம் முதலீட்டில் 200 சதுர அடி பரப்பில், சிறியதாக ஒரு காளான் வளர்ப்புக்கூடத்தை அமைத்த இவர்கள், தற்போது ரூ.10 லட்சம் மூலதனம் கொண்ட தொழிலாக மாற்றியுள்ளனர். சுமார் 600 சதுர அடி பரப்பில் 3 காளான் வளர்ப்புக் கூடங்களை அமைத்து, மாதம் 250 கிலோ முதல் 300 கிலோ வரை காளானை உற்பத்தி செய்கிறார்கள். அவற்றை முறையாக விற்பனை செய்தும் சாதிக்கிறார்கள். ஒரு காலைவேளையில் பாலகணேஷ், கலைச்செல்வன் நடத்திவரும் காளான் பண்ணைக்கு சென்றோம். காளான் உற்பத்தி, விற்பனை, பண்ணை பராமரிப்பு என பிசியான ஷெட்யூலுக்கு இடையே ஆன்லைனில் எம்.பி.ஏ. படிப்பையும் தொடர்ந்து வரும் பாலகணேஷ் நம்மை வரவேற்று பண்ணையைக் காண்பித்தவாறே பேசினார்.

“நானும், எனது தம்பி கலைச்செல்வனும் பிஎஸ்சி கணிதம் படித்திருக்கிறோம். காளான் வளர்ப்பு குறித்து கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே நிறைய கற்றுக்கொண்டோம். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் வேளாண்மைத்துறை சார்பில் நடத்தப்பட்ட காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். இதைத் தொடர்ந்து எனது தம்பி கலைச்செல்வனுடன் இணைந்து காளான் பண்ணையை ஆரம்பித்தேன். பண்ணை அமைப்பதற்கு முன் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். அப்போது காளான் வளர்ப்பு குறித்து பல விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர்களின் அனுபவத்தில் காளான் வளர்ப்பில் பிளஸ் எது? மைனஸ் எது? என தெரிந்துகொண்ட பின் பண்ணையை அமைக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் சிறிது சிறிதாக ரூ.1 லட்சம் வரை காளான் வளர்ப்பில் முதலீடு செய்தேன். ஒவ்வொரு அடியையும் பார்த்துதான் வைத்தேன்.

எவ்வளவு கவனத்துடன் இருந்தாலும் ஆரம்பத்தில் இழப்புகள் இருக்கத்தான் செய்யும். அப்போது எல்லோருமே இதை தேவையில்லாத வேலை என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் நான் விடவில்லை. தற்போது எங்களது கூட்டு உழைப்பால் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை லாபம் தரக்கூடிய தொழிலாக காளான் வளர்ப்பு மாறி இருக்கிறது. நாங்குநேரி, களக்காடு மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். தினசரி 10 கிலோ முதல் 20 கிலோ வரை விற்பனையாகும். ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்கிறோம். இதில், காளானை 200 கிராம் பாக்கெட்டாக ரூ.60க்கு விற்பதால் மக்கள் எளிதாக வாங்குகிறார்கள். தினசரி அறுவடை செய்து விற்பனை செய்தால் காளான்கள் ப்ரெஷ்ஷாக இருக்கிறது. இதனால் ஒருமுறை வாங்கினால் மீண்டும் மீண்டும் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 15 கிலோ காளானை விற்பனை செய்துவிடுவோம். இதன்மூலம் ஒருநாளைக்கு ரூ.4500 வருமானமாக கிடைக்கிறது. மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இதில் இடுபொருட்கள் வாங்குவது, பராமரிப்பு என ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதுபோக ரூ.95 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இவையெல்லாமே குறைந்தபட்ச கணக்கீடுகள்தான். காளான் வளர்ப்பில் இதைவிட கூடுதல் லாபம் பார்க்கலாம். ஆனால் கவனத்துடன் செயல்பட வேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர் நன்றாக காளான் உற்பத்தியில் ஈடுபட்ட போதிலும், எதிர்பார்த்த விற்பனை செய்ய முடியாததால் லாபம் குறைந்துவிட்டது. அதனால் நான் உற்பத்திக்கு ஏற்ப விற்பனையையும் அதிகரித்து வருகிறேன். விற்பனை குறைந்தால் அதற்கு ஏற்றாற்போல் உற்பத்தியையும் குறைத்து நஷ்டத்தை தவிர்த்து வருகிறேன். அப்படிச் செய்தால் மட்டுமே இதில் நிலைக்க முடியும்’’ என பேசத்தொடங்கிய பாலகணேஷ் காளான் வளர்ப்பு முறைகள் குறித்து விவரித்தார்.

“காளான் வளர்க்க ஸ்பா எனப்படும் விதைகள் தேவைப்படும். அதை வளர்க்க வைக்கோலை தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் வாஷிங்மெஷினில் உலர வைக்க வேண்டும். அந்த வைக்கோலை எடுத்து, அதில் விதைகளை போட்டு, அடுக்கடுக்காக வைத்து, 7க்கு 8 பாலிதீன் கவரில் உறியைக் கட்டி தொங்க விடுவதுபோல் தொங்க விட வேண்டும். அதன் சுற்றுப்புற வெப்பநிலை 20 டிகிரி செல்சியசில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதே வெப்பநிலையில் 14 நாட்கள் பராமரித்தால் காளான் நன்கு வளர்ந்திருக்கும். அதை எடுத்து பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி விடலாம். இதற்காக நான் ஓலையால் வேயப்பட்ட இரண்டு காளான் வளர்ப்புக் கூடங்களை அமைத்து இருக்கிறேன். ஓலையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும் என்பதால் தற்போது எஎசி பிளாக்கால் செய்யப்பட்ட ஒரு காளான் வளர்ப்புக் கூடத்தை அமைத்து வைத்திருக்கிறேன்.

அதில் வெளிப்புறத்தில் உள்ள வெப்பக் காற்று உள்ளே செல்லாமல் இருக்க உட்புறச் சுவரின் நான்கு புறங்களிலும் சாக்குகளை தொங்கவிட்டு இருக்கிறோம். மேலும் அந்த அறையின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீரை பனித்துளி போல் தெளிப்பதற்காக 4 துளைகள் கொண்ட பம்பிங் கருவியை ஆங்காங்கே பொருத்தி இருக்கிறேன். அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப தண்ணீரை அவ்வப்போது தெளித்தால் காளான் நன்கு வளரும். எந்தப் பொருளையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். இதை கவனத்தில் கொண்டு, அடுத்ததாக காளான் பொடி தயாரிப்பில் ஈடுபட உள்ளோம். காளான் பொடியில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், சந்தையில் நல்ல கிராக்கி. இதுபோன்ற மற்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கும் சந்தையில் எப்போதும் வரவேற்பு இருக்கும். விரைவில் கேபி காளான் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க இருக்கிறோம்” என நம்பிக்கை பொங்க பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
பாலகணேஷ்: 73976 79792.

குடும்பத்தின் கூட்டுழைப்பு

பாலகணேஷ் – கலைச்செல்வன் சகோதரர்களின் காளான் வளர்ப்புக்கு அவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் உறுதுணையாக இருக்கிறது. அவர்களது கூட்டு உழைப்பினால்தான் காளான் வளர்ப்பில் சாதிக்க முடிகிறது என்கிறார்கள் இந்த சகோதரர்கள். இதுகுறித்து பாலகணேஷ் கூறுகையில், `எனது அப்பா லட்சுமணப்பெருமாள் கட்டிட மேஸ்திரி என்பதால் காளான் வளர்ப்புப் பண்ணையின் கட்டுமானப் பணிகளை பார்த்துக்கொள்கிறார். அவரது உதவியால்தான் சமீபத்தில் நவீன காளான்வளர்ப்புக் கூடத்தை அமைத்தோம். எனது தம்பி கலைச்செல்வன் காளான் பண்ணையைப் பராமரிப்பதில் இருந்து, உற்பத்தி செய்யப்பட்ட காளானை விற்பனை செய்யும் வரை அனைத்து பணிகளையும் பார்த்துக்கொள்கிறார். மற்றொரு தம்பி ராஜசேகர் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்கிறார். எதிர்காலத்தில் இந்தப் பண்ணையை உயர் தொழில்நுட்பத்தோடு அமைக்க இருக்கிறோம். அதற்கான திட்டமிடல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களை விட காளான் பண்ணையை கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொண்டவர் எனது அம்மா முத்துலெட்சுமிதான். அனைத்து வேலைகளிலும் எங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறார். இவ்வாறாக எங்கள் ஒட்டுமொத்த குடும்பமே எங்கள் காளான் வளர்ப்புக்கு உதவியாக இருக்கிறது’ என்கிறார்.

Related posts

மதுரையில் போலி விமான டிக்கெட்டுடன் வந்த 106 பயணிகள் வெளியேற்றம்: அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக கூறி மோசடி

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!!