கை நிறைய காசு தரும் காளான் வளர்ப்பு!

பெண்கள் இன்று காலடி வைக்காத துறைகளே இல்லை. பல துறைகளில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். குடும்பச்சூழல் உள்ளிட்ட சில காரணங்களால் சிலர் வீட்டை மட்டுமே கவனிக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனாலும் அவ்வாறு வீட்டில் இருந்தாலும் சில சிறுதொழில் களில் ஈடுபட்டு ஜெயிப்பவர்கள் இருக்கிறார்கள். பிளே ஸ்கூல், பரதநாட்டிய வகுப்பு என பிசியாக இருந்தாலும் காளான் வளர்ப்புத் தொழிலில் இறங்கி அதன்மூலமும் ஒரு வருமானம் பார்த்து வருகிறார் நெல்லை மாவட்டம் ராதா புரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்த சுஜாதா மதன். சிப்பிக் காளான், பால் காளான்களை வளர்த்து, அதை நேரடியாகவும் மதிப்புக்கூட்டுப் பொருட்களாகவும் மாற்றி சந்தைப்படுத்தி சாதித்து வரும் சுஜாதா மோகனைச் சந்தித்தோம்.

“தினசரி 3 மணி நேரம் செலவிட்டால் போதும் காளான் வளர்ப்பில் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பாதிக்கலாம். கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் படித்துக்கொண்டிருந்தபோது, கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரிக்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் கல்லூரி சார்பில்தான் அங்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அந்த வேளாண்மைக் கல்லூரியில் காளான் வளர்ப்பு குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது. அப்போதிருந்து காளான் வளர்ப்பு குறித்த ஆர்வம் எனக்கு அதிகமானது. அதன்பிறகு படிப்பு, வேலை, திருமணம் என காலம் உருண்டோடியது.இடையில் மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தேன். அதன்பிறகு குடும்பத்தினருடன் நெல்லையில் உள்ள எங்கள் சொந்த ஊரான வடக்கன்குளத்திற்கு வந்துவிட்டோம். வடக்கன்குளத்திற்கு வந்த பிறகு காளான் வளர்க்கலாம் என்ற எண்ணம் வந்தது. இந்த ஆசையை எனது கணவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஊக்குவித்தார். குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவுடன் காளான் வளர்ப்பில் இறங்கினேன். ரூ.50 ஆயிரம் மானியமாகவும், ரூ.50 ஆயிரம் எனது முதலீடாகவும் வைத்து 6 மாதங்களுக்கு முன்னர் காளான் வளர்ப்புத் தொழிலை நம்பிக்கையுடன் தொடங்கினேன். முதல்கட்டமாக 400 சதுர அடி பரப்பில் ஓலையால் ஆன கூடாரம் அமைத்தேன்.

சிப்பிக் காளான் வளர்க்க வெப்பநிலை 80 டிகிரி முதல் 82 டிகிரிக்குள் இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு ஓலையால் ஆன கூடாரம் அமைத்தேன். பால் காளான் நன்கு வளர 95 டிகிரி வெப்பநிலை அவசியம். தற்போது இந்த வகை காளானையும் வளர்த்து வருகிறேன்.சிப்பிக் காளான்கள் மிகுந்த சுவையாக இருக்கும். ஆனால் அதை ஒரே நாளில் விற்பனை செய்து விட வேண்டும். விற்பனை செய்யவில்லை என்றால் வீணாகி விடும். இதனால் சிப்பிக் காளான்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறேன். பால் காளான்களை ஒரு வாரம் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். பிரியாணி போன்ற உணவுப் பொருட்களில் பால் காளான்களைச் சேர்த்தால் சுவை அதிகரிக்கும். இதுபோன்ற காரணங்களால் இரு வகையான காளான்களுக்கும் விற்பனை வாய்ப்பு இருக்கிறது.

பெரிய அளவில் வெப்பநிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தால் தினசரி சிப்பிக்காளான் 10 கிலோவும், பால் காளான் 10 கிலோவும் அறுவடை செய்வேன். நான் ஒரு கிலோ சிப்பிக் காளானை ரூ.250க்கும், ஒரு கிலோ பால் காளானை ரூ.300க்கும் விற்பனை செய்கிறேன். ஒரு நாளைக்கு ரூ.5,500 வருமானம் கிடைக்கும். இதற்காக நான் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒன்றரை மணி நேரம் செலவிடுகிறேன். தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்தவுடன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, முந்தைய நாளில் ஊற வைத்த வைக்கோலை எடுத்து வெளியே உலர்த்துவதற்காக வைப்பேன். காளான் வளர்ப்புக் கூடத்திற்குள் சென்று நன்கு வளர்ந்துள்ள காளான்களை சேகரிப்பேன். இந்த வேலைகளை முடிக்க காலை 9 மணி வரை ஆகிவிடும். பகலில் காளான் பெட் தயாரிக்கும் வேலைகளைச் செய்ய ஒரு பணியாளரை நியமித்து இருக்கிறேன். காலை 9 மணிக்கு மேல் நான் நடத்தி வரும் பிளே ஸ்கூலைக் கவனிக்கச் செல்வேன். அதன்பிறகு எனது பேக்கரிக்குச் செல்வேன். கேக் தயாரிப்பது எப்படி? என்பது தொடர்பாக பயிற்சி வகுப்புகளையும் எடுக்கிறேன். வாரத்தில் இரண்டு நாட்கள் பரதநாட்டியம் வகுப்பு எடுக்கிறேன். இதனால் தினசரி காலை முதல் இரவு வரை நேரம் சரியாக இருக்கும்.

என்னைப் பொருத்தவரை பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு ஒரு குறுகிய வட்டத்தில் சுருங்கிவிடக் கூடாது என்றுதான் சொல்வேன். அவர்கள் காளான் வளர்ப்பு போன்ற எளிமையான தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்தின் வருமானத்திற்கு வழிவகை செய்யலாம். காளானைப் பெண்கள் வீட்டில் இருந்தே எளிதாக வளர்க்க முடியும். காளானுக்கு எப்போதும் சந்தை வாய்ப்பு இருக்கிறது. நாமே அருகில் உள்ளவர்களிடம் விற்பனை செய்துவிடவும் முடியும். நம்பிக்கை இருந்தால் மட்டும் போதும்’’ எனக் கூறி புன்னகைக்கிறார்.
தொடர்புக்கு – சுஜாதா மதன்: 98941 51801.

 

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்