முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்: பக்தர்கள் காப்புகட்டி விரதம் தொடங்கினர்

திருப்பரங்குன்றம்/பழநி: பழநி மலைக்கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் சாயரட்சை, தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. விழா நடைபெறும் 7 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி தங்கச்சப்பரம், வெள்ளிக் காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.18ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன் மற்றும் சூரபத்மன் ஆகிய சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். நவ.19ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் தனுர் லக்னத்தில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அழைக்கப்படுகிறது. இந்தாண்டு கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் சண்முகர், வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டினர். இன்று துவங்கிய விழா நவ.19ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரமிருந்து சரவண பொய்கையில் நீராடி தினமும் இரண்டு வேளை கிரிவலம் வருவர். முக்கிய விழாவான சூரசம்ஹாரம் 18ம் தேதியும், இதற்காக வேல் வாங்கும் நிகழ்ச்சி 17ம் தேதியும் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் மாநகராட்சி சார்பில் மண்டல தலைவர் சுவிதாவிமல் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சோலைமலை முருகன் கோயில்: இதுபோன்று, அழகர்கோவில் மலையிலுள்ள சோலைமலை முருகன் கோயிலிலும் கந்த சஷ்டி விழா காப்புகட்டுதலுடன் இன்று காலை துவங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தொடர்ந்து சுவாமிக்கு சண்முகார்ச்சனை மற்றும் அபிஷேகம் நடந்தது. நாளை காலை 11 மணிக்கு மேல் சுவாமி காமதேனு வாகனத்திலும், 15ம் தேதி யானை வாகனத்திலும், 16ம் தேதி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 17ம் தேதி சப்பரத்தில் சுவாமி புறப்பாடும், நவ.18ம் தேதி சூரசம்ஹாரமும், நவ.19ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், கோயில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு