ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இலங்கை பிரஜையான முருகன் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்னுடைய கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முருகனின் மனைவி நளினி மத்திய அரசுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு மீது முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட கேட்டு நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில், லண்டனில் வசிக்கக்கூடிய தங்களுடைய மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக இலங்கை தூதரகத்தை தொடர்புகொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அகதிகள் முகாமில் இருந்து அவரால் வெளிவர முடிவதில்லை என்பதினால் திருவான்மியூரில் வசிக்கக்கூடிய தன்னுடன் சேர்ந்து வாழ வழி செய்யும் வகையில் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையில் உறவினருடன் தங்க அரசு அனுமதித்துள்ளதாகவும், சில வெளிநாட்டவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவதற்கு அரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த மனு நீதிபதி சேதுசாயி முன்பு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Related posts

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்