முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்க்கு பாஸ்போர்ட், ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்: தமிழக அரசு தகவல்

சென்னை : முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் உடல்நலக்குறைவு காரணமாக சாந்தன் உயிரிழந்தார். இந்த நிலையில் நளினி கணவர் முருகன், அடையாள அட்டை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில், லண்டனில் உள்ள மகளுடன் வசிப்பதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குனரிடம் விண்ணப்பித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 3 பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 பேரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை தேவையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு